

சென்னை,
அ.தி.மு.க.வுடன் தொகுதி பங்கீடு நிறைவடைந்ததை தொடர்ந்து பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் சென்னையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
வருகிற சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுக்கும், பா.ம.க.வுக்கும் இடையே தேர்தல் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி எங்களுக்கு 23 சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் பா.ம.க., அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் சேர்ந்து போட்டியிடும். நிச்சயமாக எங்கள் கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும் என்று தெரிவித்துக்கொள்கிறேன்.
வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு பெறப்பட்ட காரணத்துக்காக தொகுதி எண்ணிக்கையை நாங்கள் குறைத்து பெற்றிருக்கிறோம். ஆனாலும் எங்களுடைய பலம் குறையப்போவது இல்லை. நிச்சயமாக எங்கள் கூட்டணி இந்த தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெற்று, மீண்டும் எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக அரியணையில் ஏறுவார்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையடுத்து டாக்டர் அன்புமணி ராமதாசிடம், கடந்த சட்டமன்ற தேர்தலில் முன்வைக்கப்பட்ட மாற்றம், முன்னேற்றம் அன்புமணி என்ற திட்டம் கைவிடப்பட்டுள்ளதா?' என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், எங்களுக்கு முக்கியமானது எங்களுடைய டாக்டர் ராமதாஸ், 40 ஆண்டுகள் போராடி பல முறை சிறைக்குச் சென்று, பல தியாகங்கள் செய்து பல அரசிடம் கோரிக்கை வைத்து, தற்போது டாக்டர் ராமதாஸ் கோரிக்கை முதல்கட்டமாக நிறைவேற்றப்பட்டிருக்கிறது. 40 ஆண்டுகால போராட்டம் அதற்கு எங்களுக்கு முதல்கட்டமாக ஒரு முடிவு வந்திருக்கிறது. அதனால் இந்த தேர்தலில் நாங்கள் எங்களுடைய எண்ணிக்கையை குறைத்து பெற்றிருக்கிறோம். ஒரு கூட்டணியாக நிச்சயமாக பெரிய வெற்றியை நாங்கள் பெறுவோம்' என்றார்.