கோவை அருகே விளம்பர பேனர் சரிந்து 3 தொழிலாளர்கள் பலி

கோவை அருகே விளம்பர பேனர் பொருத்தும்போது, விளம்பர பேனர் சரிந்து 3 தொழிலாளர்கள் பரிதாபமாக இறந்தனர். 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
கோவை அருகே விளம்பர பேனர் சரிந்து 3 தொழிலாளர்கள் பலி
Published on

கோவை,

கோவை அடுத்துள்ள கருமத்தம்பட்டி வடுகபாளையம் பிரிவு அருகே சாலையோரம், இத்தாலியன் பர்னிச்சர் நிறுவனத்தின் சார்பில் விளம்பர பேனர் அமைக்கும் பணி நடைபெற்றது.

இதற்காக 60 அடி உயரத்துக்கு இரும்புத்தூண்கள் அமைக்கப்பட்டு, அதில் இரும்பு தகடுகள் பொருத்தப்பட்டன. இந்த ராட்சத விளம்பர பலகையில், பர்னிச்சர் நிறுவனத்தின் விளம்பர பேனர் பொருத்தும் பணி நேற்று மாலை நடைபெற்றது.

இந்த பணியை சேலத்தை சேர்ந்த பழனிசாமி என்பவர் ஒப்பந்தம் எடுத்து செய்து வந்ததாக கூறப்படுகிறது. இரும்புத் தூண்களின் மேல் ஏறி பேனர் பொருத்தும் பணியில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த 7 தொழிலாளர்கள் ஈடுபட்டு இருந்தனர்.

பலத்த காற்றுடன் மழை

இந்த நிலையில் நேற்று மாலை 5 மணியளவில் அந்த பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்ய தொடங்கியது. பலத்த காற்று வீசியதால், அந்த இரும்புத்தூண்கள் லேசாக அசைந்தது.

இதனால் இரும்புத்தூண்களின் மேல் நின்று பேனர் மாட்டிக்கொண்டு இருந்த தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் அதில் இருந்து கீழே இறங்க முயன்றதாக தெரிகிறது.

காற்றின் வேகத்தாலும், தொழிலாளர்கள் ஒரே பகுதியில் இறங்கியதாலும், 60 அடி உயர இரும்புத்தூண்கள் மெல்ல வளைய தொடங்கியது. இதனால் அச்சத்தில் தொழிலாளர்கள் கூச்சல் போட்டனர்.

உடைந்து விழுந்தது

இதற்கிடையே தரையில் இருந்து 10 அடி உயரத்தில் இரும்புத் தூண்களின் சில கம்பிகள் பயங்கர சத்தத்துடன் உடைந்தன.

இதனால் பாரம் தாங்காமல் அந்த இரும்புத் தூண்கள் மொத்தமாக சாய்ந்து டமார் என்ற சத்தத்துடன் தரையில் விழுந்தன. அப்போது இறங்கிக்கொண்டு இருந்த தொழிலாளர்களும் இரும்புத்தூண்களுடன் விழுந்தனர்.

3 பேர் பலி

இதில் சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரத்தை சேர்ந்த குமார் (வயது40), சேகர் (45), சேலத்தைச் சேர்ந்த குணசேகரன் (52) ஆகிய 3 தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் இடிபாடுகளில் சிக்கி அருண்குமார் (40), சண்முகசுந்தரம் (35) ஆகிய 2 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்த தகவலின் பேரில் கருமத்தம்பட்டி போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

ஒப்பந்ததாரர் மீது வழக்கு

இந்த சம்பவம் தொடர்பாக தனியார் ஒப்பந்த நிறுவன உரிமையாளர் மீது கருமத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதற்கிடையே விளம்பர பேனர் முறையான அனுமதி பெற்று வைக்கப்பட்டதா? என்று கருமத்தம்பட்டி நகராட்சி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். அதிக உயரத்தில் பேனர் அமைக்கப்பட்டதே விபத்துக்கு காரணம் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com