‘படத்துக்கு விளம்பரம் தேடவே அ.தி.மு.க.வை தாக்கி பேசுகிறார்கள்’ அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

படம் ஓட வேண்டும் என்பதற்காகவும், படத்துக்கு விளம்பரம் தேடவுமே அ.தி.மு.க.வை தாக்கி பேசுகிறார்கள் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
‘படத்துக்கு விளம்பரம் தேடவே அ.தி.மு.க.வை தாக்கி பேசுகிறார்கள்’ அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
Published on

ஆலந்தூர்,

சென்னை விமான நிலையத்தில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஜி.எஸ்.டி. கூட்டத்தில் தமிழகம் சார்பில் எடுத்து வைக்கப்பட்ட பல பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டது. ஜி.எஸ்.டி. மூலம் தமிழகத்திற்கு ரூ.4.500 கோடி வர வேண்டி உள்ளது. தமிழக பொருளாதாரம் 8.71 சதவீதம் அளவுக்கு உயர்ந்துள்ளது.

நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்களில் வெற்றி பெறுவோம். கடந்த நாடாளுமன்ற தேர்தலுடன் இந்த தேர்தலை சம்பந்தப்படுத்த முடியாது. 2 தொகுதிகளிலும் கூட்டணி கட்சிகள் ஒத்துழைப்புடன் அ.தி.மு.க. மகத்தான வெற்றி பெறும். வேலூர் நாடாளுமன்ற தேர்தலில் தப்பித்தோம், பிழைத்தோம் என்ற அளவில் தான் தி.மு.க. வெற்றி பெற்றது.

இடைத்தேர்தலை அ.ம.மு.க., மக்கள் நீதி மய்யம் புறக்கணித்துள்ளது. நடிகர் கமல்ஹாசன் 5 முதல் 7 சதவீதம் ஓட்டு தான் வாங்குவார். டி.டி.வி.தினகரன் தேறாத கேஸ். எந்த தேர்தலிலும் நிற்கப்போவதில்லை.

ஊழலுக்காக கலைக்கப்பட்ட அரசு தி.மு.க. அரசு தான். ஊழலின் மொத்த உருவம் தி.மு.க. தான். சுபஸ்ரீ சம்பவம் வருத்தப்படக்கூடிய சம்பவம். பேனர் வைக்கக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது. நடிகர் விஜய்யோ, கவுண்டமணியோ, செந்திலோ, விவேக்கோ யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம். ஆனால் அவர்கள் வந்தால் மக்களுக்கு என்ன செய்யப்போகிறார்கள் என்பதை தான் சொல்ல வேண்டும்.

ஆனால் எதிர்பாராமல் நடந்த சம்பவத்தை வைத்து அரசை தாக்கி பேசுவது தேவையில்லாத ஒன்று. அ.தி.மு.க. பழுத்த மரம் என்பதால் கல்லடிப்படும். அ.தி.மு.க.வை தொட்டால் தான் ஆளாக முடியும் என்று தொடுகின்றனர். தொட்டவர்கள் கெட்டார்கள் என்பது தான் வரலாறு.

படத்தில் போட்ட பணத்தை எடுக்க வேண்டும். படத்துக்கு விளம்பரம் தேட வேண்டும், படம் ஓட வேண்டும் என்பதற்காக வேறு வழியில்லாமல் அ.தி.மு.க.வை தாக்கி பேசுகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com