விளம்பர பேனர் முறைகேடு புகார்: பேனர் ஒன்றிற்கு ரூ.611 செலவிடப்பட்டுள்ளது - தமிழக அரசு விளக்கம்

ஒரே ஒரு தனியார் நிறுவனத்திற்கு ஆணை வழங்கப்பட்டுள்ளது என்பது உண்மைக்கு புறம்பான தகவல் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
விளம்பர பேனர் முறைகேடு புகார்: பேனர் ஒன்றிற்கு ரூ.611 செலவிடப்பட்டுள்ளது - தமிழக அரசு விளக்கம்
Published on

சென்னை,

சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் கவர்னர் ஆர்.என்.ரவியை, தமிழக சட்டமன்ற எதிர்கட்சித்தலைவரும், அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி நேற்று சந்தித்தார்.

அப்போது தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளது, போதை கலாசாரம் அதிகரித்து உள்ளது மற்றும் தமிழக அரசின் பல்வேறு துறைகளில் முறைகேடுகள் தொடர்பாக 10 பக்கங்கள் அடங்கிய மனு ஒன்றை கவர்னர் ஆர்.என்.ரவியிடம், எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

பின்னர் நிருபர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அப்போது, உள்ளாட்சியில் நடைபெறும் பணிகள் குறித்து விளக்கும் வகையிலான விளம்பர பேனர் அச்சடிப்பதில் ஊழல் நடைபெற்றுள்ளது. ஒரு பேனரை அச்சடிக்க ரூ.350 செலவாகும்.

ஆனால் ஒரு பேனருக்கு 7 ஆயிரத்து 906 ரூபாய் வீதம் தமிழகம் முழுவதும் பேனர் அடிக்க குறிப்பிட்ட ஒரே ஒப்பந்ததாரருக்கே ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. இதில் மெகா ஊழல் நடைபெற்றுள்ளது என்று தெரிவித்தார்.

இந்த நிலையில் விளம்பர பேனர் அச்சடிப்பதில் ஊழல் நடைபெற்றுள்ளதாக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்து தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில், விளம்பர பேனர் நிறுவியது தொடர்பாக மாவட்டங்களில் இருந்து விவரங்கள் பெறப்பட்டது. அதன்படி, அச்சடிக்கும் பணியில் எந்த தனியார் நிறுவனமும் ஈடுபடுத்தப்படவில்லை.

மாநிலம் முழுவதும் உள்ள 89 நிறுவனங்கள் மூலம் 27 மாவட்டங்களில் விளம்பர பேனர் அச்சிடப்பட்டுள்ளன. ஒரே ஒரு தனியார் நிறுவனத்திற்கு ஆணை வழங்கப்பட்டுள்ளது என்பது உண்மைக்கு புறம்பான தகவல்.

விளம்பர பேனர் நிறுவிட, பேனர் ஒன்றுக்கு ரூ.7,906 செலவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது தவறானது. சராசரி மதிப்பீடாக பேனர் ஒன்றிற்கு சுமார் ரூ.611 ரூபாய் (சரக்கு, சேவை கட்டணம் உட்பட) செலவிடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com