பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்துவது குறித்து ஆலோசனை - அமைச்சர் செங்கோட்டையன்

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்துவது குறித்து கல்வித்துறை ஆய்வு செய்து முடிவு செய்ய உள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்துவது குறித்து ஆலோசனை - அமைச்சர் செங்கோட்டையன்
Published on

ஈரோடு,

ஈரோடு மாவட்டம் நம்பியூரில் இன்று அமைச்சர் செங்கோட்டையன்நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்துவது குறித்து கல்வித்துறை ஆய்வு செய்து முடிவு செய்ய உள்ளது. முதல்-அமைச்சர் ஒப்புதல் பெற்றவுடன் அட்டவணை வெளியிடப்படும் என்றார். நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்பதற்காகவே தனியார் கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர்.

அரசு பள்ளியில் உள்ள மாணவர்கள் அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்க வேண்டும் என்பது தான் அரசின் நோக்கம். அதற்காகவே பெற்றோர்கள் விரும்பி அரசு பள்ளியில் சேர்க்கின்றனர்.

இதை ஊக்கப்படுத்த தான் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை அரசு கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் 405 மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளனர். ஒவ்வொரு துறையிலும் உள்ள நிதி நிலைக்கேற்ப அரசு செயல்பட்டு வருகிறது. பல லட்சம் ரூபாய் செலவு செய்து எத்தனை பேரால் தனியார் பள்ளிகளில் சேர்க்க முடியும். ஒரு லட்சம் ரூபாய் வரை செலவு செய்து எத்தனை பேரால் நீட் பயிற்சி பெற முடியும்?

நீட் தேர்வில் பயிற்சி பெற பல லட்சம் ரூபாய் செலவு செய்து, பெற்றோர்களும் மாணவர்களை படிக்க வைக்கின்றனர். இதை பாராட்ட வேண்டுமே தவிர விமர்சனம் செய்யக் கூடாது.

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு நேரடியாக சிறப்பு தேர்வு நடத்துவது குறித்து கல்வித்துறை ஆய்வு செய்து முடிவு செய்துள்ளது. முதல்-அமைச்சர் ஒப்புதல் பெற்றவுடன் அட்டவணை மூலமாக வெளியிடப்படும். பாடநூல் திட்டம் மூலமாக அரசு பள்ளி மாணவர்களுக்கு புத்தகம் வழங்கி வருகிறோம். அரசு பள்ளியில் உள்ள மீதமுள்ள புத்தகங்களை திரும்ப அனுப்பி வருகின்றனர். அவற்றை கரூரில் உள்ள டி.என்.பி.எல் நிறுவனத்திடம் ஒப்படைக்கிறோம்.

அவற்றை பெற்றோர் ஆசிரியர் சங்கம், எந்த பள்ளிகள் வேண்டுமானாலும் வாங்கலாம். ஒருவர் 2 ஆயிரம் புத்தகங்களை விற்பனைக்கு வைத்து இருந்தார் என்பதற்காக அதை பற்றியே பேசக்கூடாது என்றார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com