கருணாநிதியின் உருவப்படம் திறப்பு விழாவுக்கு வருகை தரும் ஜனாதிபதிக்கு கூடுதல் பாதுகாப்பு அளிப்பது குறித்து ஆலோசனை

சட்டசபையில் கருணாநிதியின் உருவப்படம் திறப்பு விழாவில் பங்கேற்க சென்னைக்கு வரும் ஜனாதிபதிக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் அளிப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு தலைமையில் நேற்று நடந்தது.
கருணாநிதியின் உருவப்படம் திறப்பு விழாவுக்கு வருகை தரும் ஜனாதிபதிக்கு கூடுதல் பாதுகாப்பு அளிப்பது குறித்து ஆலோசனை
Published on

சென்னை,

சென்னை தலைமைச் செயலகத்தில் வருகிற 2-ந் தேதி நடக்கவிருக்கும் சட்டசபை நூற்றாண்டு விழாவில் முன்னாள் முதல்-அமைச்சர் மு.கருணாநிதியின் முழுஉருவப்படம் திறப்பு விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கலந்து கொண்டு கருணாநிதியின் உருவப்படத்தை திறந்து வைக்கிறார். இந்த விழாவுக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் தலைமை தாங்குகிறார். சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், தலைமைச்செயலாளர் வெ.இறைன்பு உள்ளிட்ட அதிகாரிகள் சிறப்பு விருந்தினர்கள் உள்பட பலர் கலந்து கொள்ள இருக்கின்றனர்.

விழாவுக்கான ஏற்பாடுகள் தலைமை செயலக அதிகாரிகள் செய்து வருகின்றனர். இந்தநிலையில் ஜனாதிபதியின் வருகைக்கு ஒரு வாரம் மட்டுமே இருக்கும் நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.

பலத்த பாதுகாப்பு

இந்தநிலையில் ஜனாதிபதி வருகையையொட்டி பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு தலைமையில் உயர் அதிகாரிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில், டி.ஜி.பி. சைலேந்திர பாபு, சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி மற்றும் பல்வேறு அரசு மற்றும் காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:-

சென்னைக்கு ஜனாதிபதி வருகையையொட்டி சிறப்பு பாதுகாப்பு படை அதிகாரிகள் சென்னைக்கு வர உள்ளனர். அவர்கள், சென்னை பழைய விமான நிலையத்தில் ஜனாதிபதியின் தனி விமானம் மற்றும் ஹெலிகாப்டா வந்து இறங்கும் பகுதிகள், சட்டசபை நூற்றாண்டு நிகழ்ச்சிகள் நடக்கும் சட்டசபை வளாகம், அடிக்கல் நாட்டும் பகுதிகளில் செய்ய வேண்டி உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்ய உள்ளனர்.

இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.

சட்டசபை மண்டபம்

இதையொட்டி சட்டசபை மண்டபத்தை கடந்த சில நாட்களாக தூய்மைப்படுத்தி புதுப்பொலிவாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

சட்டசபை மண்டபம் அருகில் உள்ள வசந்த மண்டபமும் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. அங்குள்ள இருக்கைகள் அனைத்தும் வர்ணம் பூசப்பட்டு புதுப்பொலிவாக்கப்பட்டு வருகிறது. சட்டசபை பால்கனியில் புத்தம் புதிய சோபாக்களும் போடப்பட்டு உள்ளன. கொரோனா காலம் என்பதால் சட்டசபை வளாகத்தில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டு வருகிறது. விழாவையொட்டி சட்டசபை நுழைவு வாயில் அருகில் ஜனாதிபதியை வரவேற்று அலங்கார வளைவுகளும் அமைக்கப்படுகின்றன.

கருணாநிதியின் உருவப்படம்

இந்தநிலையில் சட்டசபையில் வைக்கப்படும் கருணாநிதியின் உருவப்படத்தை புகழ்பெற்ற அரசு ஆர்ட்ஸ் நிறுவனத்தினர் மிக தத்ரூபமாக வரைந்து வருகின்றனர். இவர்கள் கருணாநிதியின் ஆயிரக்கணக்கான படங்களை தத்ரூபமாக வரைந்து அவரிடமே பாராட்டு பெற்றவாகள் ஆவா. விரைவில் பணி நிறைவு செய்யப்பட்டு சட்டசபை வளாகத்திற்கு கொண்டு வந்து பொறுத்தப்படும். முறையாக ஜனாதிபதி இந்த படத்தை திறந்து வைப்பார்.

சென்னையில் நடக்கும் நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு 3-ந் தேதி ஜனாதிபதி ஊட்டிக்கு செல்கிறார். இதையொட்டி சென்னையிலும், ஊட்டியிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com