13 ஆண்டுகளுக்கு பிறகு மேட்டூர் அணைக்கு 2 லட்சம் கனஅடி நீர்வரத்து

மேட்டூர் அணைக்கு 13 ஆண்டுகளுக்கு பிறகு வினாடிக்கு 2 லட்சம் கனஅடி தண்ணீர் வருகிறது.
13 ஆண்டுகளுக்கு பிறகு மேட்டூர் அணைக்கு 2 லட்சம் கனஅடி நீர்வரத்து
Published on

மேட்டூர்,

கர்நாடகா, கேரள மாநிலங்களில் பெய்துவரும் கனமழை காரணமாக கர்நாடகாவில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பின. இதனால் இந்த அணைகளில் இருந்து வினாடிக்கு 2 லட்சம் கனஅடி வீதம் உபரிநீர் தமிழகத்துக்கு திறந்துவிடப்பட்டது.

ஒகேனக்கல்லுக்கு நேற்று மாலை வினாடிக்கு 2 லட்சம் கனஅடி தண்ணீர் வந்துகொண்டிருந்தது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. விடுமுறை தினமான நேற்று ஒகேனக்கல்லுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர்.

ஒகேனக்கல் அருகே மலை அடிவாரத்தில் உள்ள புளியமரத்துகொம்பு கொண்டலாம்கொட்டாய் கிராமத்தில் 10 வீடுகள் தண்ணீரில் மூழ்கின. இதனால் பொதுமக்கள் வெளியேறி மலை அடிவாரத்தில் தங்கி உள்ளனர். இவர்கள் குடிநீர், உணவு உள்ளிட்ட எந்த ஒரு அடிப்படை வசதிகளும் இல்லாமல் தவித்து வருகின்றனர்.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்று காலை 119.85 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 2 லட்சம் கனஅடி தண்ணீர் வந்துகொண்டிருந்தது. 2005-ம் ஆண்டு அணைக்கு 2 லட்சம் கனஅடிக்கும் மேல் தண்ணீர் வந்தது. அதன்பின்னர் 13 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மேட்டூர் அணைக்கு 2 லட்சம் கனஅடி தண்ணீர் வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நீர் அப்படியே திறந்துவிடப்படுகிறது.

அணையின் 16 கண் பாலம் வழியாக திறந்துவிடப்பட்டுள்ள தண்ணீர் ஆர்ப்பரித்துக்கொண்டு பயங்கர சத்தத்துடன் வெளியேறுகிறது. இந்த தண்ணீர் செல்லும் பாதையில் விவசாய பயிர்களை மூழ்கடித்துக் கொண்டும், கட்டிடங்களை சூழ்ந்தபடியும் செல்கிறது. மேட்டூரில் எடப்பாடி ரோட்டை மூழ்கடித்துக்கொண்டு தண்ணீர் பாய்வதால் 4 நாட்களாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் தங்கமாபுரிபட்டணம் பெரியார் நகரில் காவிரி கரையோரம் மண் அரிப்பு காரணமாக மின்சார டிரான்ஸ்பார்மர் சரிந்து விழுந்தது. அதில் ஏற்கனவே முன்னெச்சரிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பாதிப்பு எதுவும் இல்லை.

மேட்டூரில் உள்ள நிவாரண முகாமில் பாதிக்கப்பட்ட பலர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இதேபோல் தேவூர் பகுதியிலும் காவிரி வெள்ளத்தால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நிலங்கள், வீடுகள், பாலத்தை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே காவிரி ஆற்றின் நடுப்பகுதியில் நட்டாற்றீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் வளாகத்தில் ஒரு மாடு, 2 கன்றுக்குட்டிகள் உள்ளன. காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் கோவில் வளாகத்திற்குள் தண்ணீர் புகுந்தது. எனவே மாடுகளை மீட்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதனையடுத்து படகு மூலம் கால்நடை அதிகாரி தலைமையில் 8 பேர் நேற்று கோவிலுக்கு சென்று, மாடு மற்றும் கன்றுக்குட்டிகளை மீட்டனர். பின்னர் அவற்றை கோவிலில் 20 அடி உயரத்தில் உள்ள மேல் தளத்திற்கு கொண்டு சென்று கட்டி போட்டனர். அங்கு மாடுகளுக்கு தேவையான தீவனங்களை வைத்துவிட்டு கரை சேர்ந்தனர்.

இதற்கிடையே காவிரி ஆற்றில் வினாடிக்கு 2 லட்சம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டதால் பவானியில் மேலும் 100 வீடுகளில் வெள்ளம் புகுந்தது. அங்குள்ள தினசரி மார்க்கெட்டை தண்ணீர் சூழ்ந்ததால் காய்கறி விற்பனை முடங்கியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com