நெல்லையப்பர் கோவிலில் 17 வருடங்களுக்குப் பிறகு இன்று 4 வாசல்களும் திறப்பு

திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் 17 வருடங்களாக அடைக்கப்பட்டிருந்த வடக்கு, தெற்கு மற்றும் மேற்கு வாசல்கள் இன்று திறக்கப்பட்டன.
நெல்லையப்பர் கோவிலில் 17 வருடங்களுக்குப் பிறகு இன்று 4 வாசல்களும் திறப்பு
Published on

நெல்லை,

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் கோவில், நெல்லையின் அடையாளமாகத் திகழ்கிறது. சிவபெருமானின் பஞ்ச சபைகளில் தாமிரசபையாக போற்றப்படுகிறது. இந்த கோவிலைச் சுற்றி இருக்கும் நான்கு ரத வீதிகளில் ஒவ்வொரு ஆண்டும் தேரோட்டத் திருவிழா நடைபெறும். இங்கு நடைபெறும் ஆனித்தேரோட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் தமிழகம் முழுவதிலும் இருந்து பக்தர்கள் வந்து வழிபடுவது வழக்கம்.

நூற்றாண்டுகளைக் கடந்து கம்பீரமாகக் காட்சியளிக்கும் நெல்லையப்பர் கோவிலில் அனைத்து சிவன் கோவில்களிலும் உள்ளது போல நான்கு புறமும் வாசல்கள் உள்ளன. அதன் வழியாகப் பக்தர்கள் வந்து செல்வார்கள். ஆனால் கடந்த 2004 ஆம் ஆண்டு வடக்கு வாசல் அருகே நடந்த கொலை சம்பவம் காரணமாக பாதுகாப்பு கருதி கிழக்கு வாசல் தவிர பிற வாசல்கள் அனைத்தும் அடைக்கப்பட்டன.

கோவிலின் மேற்கு, வடக்கு மற்றும் தெற்கு வாசல்கள் மூடப்பட்டதால் கடந்த 17 வருடங்களாக பக்தர்கள் கிழக்கு வாசலை மட்டுமே பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, சமீபத்தில், நெல்லையப்பர் கோவிலில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பக்தர்கள் சார்பில், அனைத்து வாசல்களையும் திறக்க கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அந்த வாசல்களைத் திறக்க அவர் உத்தரவிட்டார். அதன்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு அனைத்து வாசல்களையும் திறக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது.

முன்னதாக, கோவில் யானை காந்திமதி வரவழைக்கப்பட்டு கஜபூஜை நடத்தப்பட்டது. பின்னர் 3 வாசல் கதவுகளுக்கும் சிறப்பு தீபாரதனை நடந்தது. அதனை தொடர்ந்து 17 ஆண்டுகளுக்குப் பிறகு கோவிலின் அனைத்து வாசல்களும் திறக்கப்பட்டன. நீண்ட நாட்களுக்கு கோவிலின் நான்கு வாசல்களும் திறக்கப்பட்டதால், பக்தர்கள் அந்த வழியை பயன்படுத்தி மகிழ்ச்சியுடன் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com