2 ஆண்டுகளுக்கு பிறகு திருப்பரங்குன்றத்தில், நாளை தெப்பத்திருவிழா - பக்தர்கள் குவிகிறார்கள்

திருப்பரங்குன்றத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்குப் பிறகு தெப்பத் திருவிழா கோலாகலமாக நாளை(செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இதில் ஏராளமான பக்தர்கள் குவிகிறார்கள்.
2 ஆண்டுகளுக்கு பிறகு திருப்பரங்குன்றத்தில், நாளை தெப்பத்திருவிழா - பக்தர்கள் குவிகிறார்கள்
Published on

திருப்பரங்குன்றம்,

திருப்பரங்குன்றத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்குப் பிறகு தெப்பத் திருவிழா கோலாகலமாக நாளை(செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இதில் ஏராளமான பக்தர்கள் குவிகிறார்கள்.

இன்று தேரோட்டம்

திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவிலில் ஆண்டுதோறும் தை மாதத்தில் தெப்பத்திருவிழா 10 நாட்கள் விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு அமலில் இருந்ததால் கடந்த 2 ஆண்டுகளாக கோவிலுக்குள்ளே உள்திருவிழாவாக தெப்பத்திருவிழா நடந்தது.

இந்த நிலையில் இந்த ஆண்டிற்கான தெப்பத்திருவிழா கடந்த 22-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவின் 9-வது நாளான இன்று (திங்கட்கிழமை) காலை 9.40 மணியளவில் தை கார்த்திகை தேரோட்டம் நடக்கிறது

தெப்பத்திருவிழா

இதற்கிடையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக நாளை (செவ்வாய்க்கிழமை) தெப்பத்திருவிழா நடக்கிறது. இதனையொட்டி ஜி.எஸ்.டி.ரோட்டில் உள்ள தெப்பக்குளத்தில் சுற்றுச்சுவர் முழுவதுமாக வெள்ளை மற்றும் சிவப்பு நிற வர்ணம் பூசப்பட்டுள்ளது.

மேலும் 15 அடி உயரம் கொண்ட தெப்பக்குளத்தில் 6 அடி உயரத்திற்கு தண்ணீர் நிரப்பப்பட்டு தயார்படுத்தப்பட்டுள்ளது.தெப்பக்குளத்தில் சுவாமி உலா வருவதற்கு ஏற்ப 24 அடி நீளமும், 24 அடி அகலமும், 28 அடி உயரமும் கொண்ட தெப்ப மிதவை தேர் தயார்படுத்தும் பணி நடந்துவருகிறது. இன்று மாலைக்குள் தெப்ப மிதவை தேர் தயாராகிவிடும்.

தெப்ப மிதவை தேர்

திருவிழாவையொட்டி நாளை காலை 11 மணியளவில் தெப்பக்குளத்தில் தயாராகும் தெப்ப மிதவையில் தெய்வானையுடன் சுப்பிரமணியசுவாமி அமர்ந்து தெப்பக்குளத்தை மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இதேபோல மீண்டும் மாலை 6 மணியளவில் மின்னொளியில் தெப்பக்குளத்தில் சுவாமி அம்பாளுடன் எழுந்தருளுகிறார். அங்கு பக்தர்கள் தெப்ப மிதவை தேரில் இணைக்கப்படும் வடத்தினை பிடித்து இழுத்து தெப்பக்குளத்தை சுற்றி வந்து சாமி தரிசனம் செய்கிறார்கள். தெப்பத்திருவிழாவையொட்டி கோவிலில் பக்தர்கள் குவிய தொடங்கி உள்ளனர்.

விழா ஏற்பாடுகளை கோவில் துணை கமிஷனர் நா.சுரேஷ் தலைமையில் சிவாச்சாரியார்கள் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com