3 மாதங்களுக்கு பிறகு.. குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

மழை இல்லாததால் நீர்வரத்து குறைந்த நிலையில் குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.
குற்றாலம்
Published on

தென்காசி,

குற்றாலம்

தென்காசி மாவட்டத்தையொட்டி உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாக சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. நேற்று முன்தினம் மதியத்திற்கு மேல் கனமழை பெய்ததால் ஐந்தருவி, பழைய குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதனால் நேற்று முன்தினம் மதியம் முதல் புலியருவி, சிற்றருவி தவிர அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட் டிருந்தது.

உற்சாக குளியல்

நேற்று காலை மழைப்பொழிவு இல்லாததால் ஐந்தருவிக்கு தண்ணீர் வரத்தும் சற்று குறைந்த நிலையில் மீண்டும் அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது. நேற்று காலை முதலே குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். ஐந்தருவியின் அனைத்து கிளைகளிலும், புலியருவி, சிற்றருவியிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் அங்கு சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் நின்று உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.

குளிக்க அனுமதி

பழைய குற்றால அருவியில் தொடர்ந்து தண்ணீர் அதிகமாக விழுவதால் 2-வது நாளாக குளிக்க தடை நீடிக்கிறது.

இந்நிலையில் 3 மாதங்களுக்கு பிறகு குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. முன்னதாக மெயின் அருவியில் பராமரிப்பு பணிகள் காரணமாக குளிக்க அனுமதிக்கப்படாமல் இருந்து வந்தது.

வார இறுதி விடுமுறை

சுற்றுலா பயணிகள் கூட்டம் காரணமாக அருவிக்கரையில் உள்ள கடைகளில் வியாபாரம் சூடுபிடித்துள்ளது. வார இறுதி விடுமுறை நாட்கள் என்பதால் நேற்று முதலே குற்றாலத்தில் உள்ள தனியார் தங்கும் விடுதிகள் அனைத்தும் விறுவிறுவென நிரம்ப தொடங்கியுள்ளன.

X

Daily Thanthi
www.dailythanthi.com