

திருவட்டார்,
தென்னகத்தின் வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஆதிகேசவபெருமாள் கோவில் குமரி மாவட்டத்தில் உள்ள திருவட்டாரில் அமைந்துள்ளது. இந்த கோவில் 108 வைணவத்தலங்களில் 76-வதாகவும், 13 மலைநாட்டு தலங்களில் ஒன்றாகவும் விளங்கி வருகிறது.
இப்படி பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்ட திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் 1604-ம் ஆண்டு நடந்துள்ளது. அப்போதைய வேணாட்டு அரசர் வீர ரவிவர்மாவால் திருப்பணிகள் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடந்ததாக கல்வெட்டு கூறுகிறது. அதன்பிறகு கோவில் கும்பாபிஷேகம் நடைபெறவில்லை.
இந்தநிலையில் 418 ஆண்டுக்கு பிறகு திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் கும்பாபிஷேகத்தை சிறப்பாக நடத்த தமிழக அரசு முடிவு செய்தது. இதற்காக கோவிலில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதனையடுத்து கும்பாபிஷேக பூஜைகள் கடந்த 29-ந்தேதி தொடங்கி நடந்தது. இதைத்தொடர்ந்து திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.
காலை 6.19 மணிக்கு கோபுர கலசத்துக்கு புனித நீர் கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து கோவில் கருவறை, ஒற்றைக்கல் மண்டபம், உதயமார்த்தாண்ட மண்டபம் ஆகியவற்றில் உள்ள கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடந்தது.
இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
கும்பாபிஷேகம் முடிவடைந்ததும் காலை 7.30 மணிக்கு இந்திய பாதுகாப்பு படை வீரர்கள் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
கும்பாபிஷேக விழாவில் அமைச்சர்கள் சேகர்பாபு, மனோ தங்கராஜ், விஜய் வசந்த் எம்.பி., முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர். இதில் அமைச்சர் சேகர் பாபு மட்டும் நம்பூதிரிகளுடன் கும்ப கலசத்தின் அருகே வரை சென்று வழிபட்டார்.