

சென்னை,
சென்னையில் முக்கிய போக்குவரத்துகளில் ஒன்றாக இருப்பது மின்சார ரெயில் சேவை. மின்சார ரெயில்களில் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் பயணித்து வருகின்றனர். இதன்படி சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் நடைமேடை 10 மற்றும் 11 வழியாக மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வந்தன. இந்த ரெயில் நிலை யத்தில் மறுசீரமைப்பு பணிகள் நடந்து வந்ததால், நடைமேடை 10, 11 வழியாக இயக்கப்பட்ட மின்சார ரெயில் சேவை, 5, 6-வது நடைமேடைக்கு மாற்றப்பட்டன. இதுதவிர ரெயில் சேவையும் கணிசமாக குறைக்கப்பட்டன. இதனால் பயணிகள் அவதிப்பட்டனர்.
மேலும் மறுசீரமைப்பு முடிந்ததும் வழக்கமான ரெயில் சேவை ஏப்ரல் 5-ந்தேதி தொடங்கும் என்று தென்னக ரெயில் அறிவித்து இருந்தது. இந்தநிலையில், பணிகள் முடிக்கப்பட்டநிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் மீண்டும் நடைமேடை 10,11 வழியாக மின்சார ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. அனைத்துப் பணிகளும் திட்டமிட்ட நேரத்திற்கு முன்னரே வெற்றிகரமாக முடிக்கப்பட்டதால், இந்த தடை முன்கூட்டியே ரத்து செய்யப்பட்டு, புறநகர் ரெயில் சேவைகள் மீண்டும் முழுமையாக செயல்பட தொடங்கி உள்ளன.இதனால் அதில் பயணம் செய்யும் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதனிடையே கடந்த பிப்ரவரி 20-ந்தேதிக்கு முன்பு நடைமுறையில் இருந்து வழக்கமான வார நாட்கள் மற்றும் ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணை மீண்டும் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி, வார நாட்களில் சென்னை கடற்கரை தாம்பரம் செங்கல்பட்டு இடையே 106 ரெயில் சேவைகளும், மறுமார்க்கமாக, செங்கல்பட்டு தாம்பரம் - கடற்கரை இடையே 106 ரெயில் சேவைகளும் என இரு மார்க்கமாகவும் மொத்தம் 212 மின்சார ரெயில் சேவைகள் இயக்கப்படுகின்றன.
இதேபோல, ஞாயிற்றுக்கிழமை அட்டவணைபடி சென்னை கடற்கரை-தாம்பரம்-செங்கல்பட்டு இடையே 93 சேவைகளும், மறுமார்க்கமாக, செங்கல்பட்டு - தாம்பரம் - கடற்கரை இடையே 97 சேவைகளும் என மொத்தம் 190 ரெயில் சேவைகள் இயக்கப்படுகிறது. குறித்த காலத்திற்கு முன்பே பணிகளை முடித்து, கோடை காலத்தில் பயணிகளின் சிரமத்தைக் குறைத்த ரெயில்வே ஊழியர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.