

சென்னை,
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துவரும் நிலையில், ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களின் வாழ்வாதார தேவைகளுக்குரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செய்துவிட்டு, ஊரடங்கை மேலும் ஓரிரு வாரங்களுக்கு நீட்டிப்பது குறித்து அரசு முடிவெடுக்க வேண்டும்.
பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்திற்கு இணையாக ஊரடங்கினால் கடுமையான பாதிப்புக்கு ஆளாகி இருக்கும் ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்தையும் அரசு உறுதி செய்யவேண்டும். 10 நாட்களை கடப்பதற்குள்ளாகவே அவர்கள் படாதபாடுபட்டு வருகிறார்கள். அரசு அறிவித்த ரூ.1,000 உதவித்தொகை இன்னும் முழுமையாக சென்றடையாத நிலையில், ஊரடங்கை நீட்டிக்கும்போது குறைந்தபட்சம் அவர்களுக்கு உணவு கிடைப்பதற்கான ஏற்பாட்டையாவது திட்டமிட்டு செய்யவேண்டும்.
இந்த நேரத்தில் நடமாடும் அம்மா உணவகங்களை செயல்படுத்துவது மக்களுக்கு பேருதவியாக இருக்கும்.
இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.