

சென்னை,
தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த மாதம் (ஏப்ரல்) 23-ந் தேதி ஒரே கட்டமாக நடந்தது. தேர்தல் களத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி, அ.தி.மு.க., பா.ஜனதா உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய கூட்டணி என இருபெரும் அணிகளுடன், தமிழக அரசியலில் புதிய வரவான நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் மற்றும் நாம் தமிழர் கட்சியும் இறங்கின.
இது தவிர டாக்டர் ராமதாஸ், சசிகலா இணைந்து ஒரு கூட்டணி அமைத்தும் போட்டியிட்டனர். இருப்பினும் களத்தில் 4 முனை போட்டி ஏற்பட்டது. அதிலும் தி.மு.க., அ.தி.மு.க., த.வெ.க. கட்சிகளிடையே கடும் போட்டி இருந்ததை காணமுடிந்தது. அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களுடன், சுயேச்சை வேட்பாளர்களும் சேர்ந்து 234 தொகுதிகளிலும் 4 ஆயிரத்து 23 பேர் தேர்தல் களத்தில் இருந்தனர். தேர்தலுக்கு முந்தைய மற்றும் பிந்ததைய கருத்துக்கணிப்புகள் வெளிவந்து பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தன.
இந்த சூழலில் 234 சட்டசபை தொகுதிகளில் பதிவான வாக்குகள் இன்று (திங்கட்கிழமை) எண்ணப்பட்டு வருகின்றன. இதன் முடிவில் யார் அரியணையில் அமரப்போகிறார்கள் என்பது தெரியவரும். தற்போது நடைபெற்று வரும் தமிழக சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் ஆரம்ப கட்டத்திலிருந்தே முன்னிலை வகித்து வருகிறது. வாக்கு எண்ணிக்கை இன்னும் தொடர்ந்து நடைபெற்று வரும் வேளையில், தவெக முன்னிலையில் இருப்பது அவரது ரசிகர்கள் மற்றும் அக்கட்சியினரிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் யாருமே எதிர்பார்க்காத வகையில் தேர்தல் முடிவுகள் வந்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில், தற்போதுவரை விஜயின் தவெக 100-க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலையில் உள்ளது. தமிழ்நாட்டில் ஒரு தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க, ஒரு கட்சி அல்லது கூட்டணிக்கு 118 தொகுதிகள் தேவைப்படுகின்றன. இந்த சூழலில், விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 100 தொகுதிகளுக்கு மேல் முன்னிலையில் உள்ளது.
தமிழ் சினிமா உலகில் முன்னணி ஹீரோவாக கோலோச்சிக் கொண்டிருந்த விஜய், தவெக கட்சியை ஆரம்பித்த இரண்டே ஆண்டுகளில் அரசியல் களத்திலும் வலுவாக கால் பதித்துள்ளார். முதல் தேர்தலிலேயே ஆட்சியை பிடிக்கும் நிலைக்கு வந்துள்ளார் விஜய். தமிழக அரசியல் வரலாற்றில் இது திருப்புமுனையான ஒன்றாக பார்க்கப்படுகிறது.
முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆருக்கு பிறகு கட்சி ஆரம்பித்த உடன் பெரும் தாக்கத்தை விஜய் ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. இதன்படி நடைபெற்றுவரும் சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தனிப்பெரும் கட்சியாக தவெக உருவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
1. எம்.ஜி.ஆர். - 1977 - அ.தி.மு.க. - 33.52%
2. என்.டி.ராமராவ் - 1983 - தெலுங்கு தேசம் கட்சி - 46.30%.
3. விஜயகாந்த் - 2006 - தே.மு.தி.க. - 8.38%.
4. சிரஞ்சீவி - 2009- பிரஜா ராஜ்ஜியம் கட்சி - 16.38%.
5. பவன்கல்யாண் - 2019 - ஜனசேனா கட்சி - 5.53%.
6. கமல்ஹாசன் - 2021 - மக்கள் நீதி மய்யம் - 2.62%.
7. விஜய் - 2026 - தமிழக வெற்றிக் கழகம் - 13.13% (தற்போது வரை)
த.வெ.க. - 108
அ.தி.மு.க. - 63
தி.மு.க. - 63
நா.த.க. - 0