கணக்கெடுப்பு பணி முடிந்தவுடன் ‘கஜா’ புயலில் சேதம் அடைந்த படகுகளுக்கு நிவாரணம் மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் அறிவிப்பு

கஜா புயலில் சேதம் அடைந்த படகுகளுக்கு நிவாரணம் வழங்கப்படும் என்று மீன் வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் அறிவித்துள்ளார்.
கணக்கெடுப்பு பணி முடிந்தவுடன் ‘கஜா’ புயலில் சேதம் அடைந்த படகுகளுக்கு நிவாரணம் மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் அறிவிப்பு
Published on

சென்னை,

கஜா புயலால் மீனவ கிராமங்களில் ஏற்பட்ட பாதிப்புகள், சேதங்கள் குறித்து மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஒக்கி புயலில் ஏற்பட்ட அனுபவங்களை முன் மாதிரியாக எடுத்துக்கொண்டு, கஜா புயலின் தாக்கம் கடுமையாக இருக்கும். எனவே மீன்பிடிக்க கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று கடந்த 11-ந் தேதியே மீனவர்களுக்கு எச்சரிக்கை கொடுக்கப்பட்டது.

மீன்வளத்துறை அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள் ஒவ்வொரு மீனவ கிராமங்களுக்கும் சென்று கண்காணித்தனர். மறு உத்தரவு வரும் வரை கடலுக்கு செல்லக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டது.

கடலூர், நாகப்பட்டினம், தஞ்சை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் 333 மீனவ கிராமங்களில் 4 ஆயிரத்து 926 விசைப்படகுகள், 18 ஆயிரத்து 364 நாட்டுப்படகுகள் கண்டிப்பாக படகுகள் நிறுத்தும் தளத்தில் நிறுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

அதனடிப்படையில் யாரும் மீன்பிடிக்க கடலுக்குள் செல்லாததால் எந்த மீனவர்களுக்கும் ஆபத்து ஏற்படவில்லை. ஆனால் நாட்டுப்படகுகள் கடலுக்குள் அடித்து செல்லப்பட்டு இருக்கிறது. தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினத்தில் 200-க்கும் மேற்பட்ட படகுகள் கவிழ்ந்துள்ளதாக தகவல் வந்துள்ளது.

புயல் பாதித்த இடங்களில் பகுதியாக சேதமடைந்த படகுகள் எத்தனை? முழுமையாக சேதமடைந்த படகுகள் எவ்வளவு? என்பது குறித்த கணக்கெடுப்பு பணிகளை வருவாய்த்துறை, மீன்வளத்துறை அதிகாரிகள் இணைந்து மேற்கொண்டுள்ளனர்.

அவர்கள் கொடுக்கும் அறிக்கையின் அடிப்படையில் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உரிய நிவாரணம் வழங்குவார். தமிழக அரசு மேற்கொண்ட புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எதிர்க்கட்சிகளும் பாராட்டி உள்ளன. அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com