மீண்டும் உயர்ந்த தக்காளி விலை

தென்காசி மாவட்டத்தில் தக்காளி விலை மீண்டும் உயர்ந்து உள்ளது.
மீண்டும் உயர்ந்த தக்காளி விலை
Published on

நெல்லை, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் போதிய மழை பெய்யாததால் காய்கறிகள் விளைச்சல் பாதிக்கப்பட்டு உள்ளது. மேலும் கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும் காய்கறிகள் வரத்து குறைந்துள்ளது. இதுபோன்ற காரணங்களால் காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

இந்த விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்த போதிலும் போதிய பலன் கிடைக்கவில்லை. தக்காளி விலை படிப்படியாக ரூ.200 வரையிலும் அதிகரித்து, பின்னர் சற்று குறைய தொடங்கியது. கடந்த வாரம் கிலோ ரூ.100-க்கு விற்ற தக்காளியின் விலை மேலும் குறையும் என்று இல்லத்தரசிகள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

ஆனால் அதற்கு மாறாக தக்காளி விலை மீண்டும் உயர்ந்து உள்ளது. நெல்லை மகாராஜ நகர் உழவர் சந்தையில் நேற்று முன்தினம் ஒரு கிலோ தக்காளி ரூ.100-க்கு விற்கப்பட்ட நிலையில் நேற்று மேலும் ரூ.16 உயர்ந்து ரூ.116-க்கு விற்கப்பட்டது. சில்லறை விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.150-க்கு விற்பனையானது. இதனால் இல்லத்தரசிகள் குறைவான அளவே தக்காளி வாங்கி சென்றதை பார்க்க முடிந்தது.

இதேபோல் இஞ்சி விலையும் மீண்டும் உயரத்தொடங்கி உள்ளது. ஒரு கிலோ இஞ்சி ரூ.265-ல் இருந்து ரூ.270 ஆக உயர்ந்துள்ளது. சில்லறை கடைகளில் ரூ.300-க்கும் அதிகமாக விற்கப்பட்டது. உழவர் சந்தையில் சின்ன வெங்காயம் விலை கிலோ ரூ.85-ல் இருந்து ரூ.72 ஆக குறைந்துள்ளது. மிளகாய் விலை சற்று குறைந்து ரூ.64-க்கு விற்கப்பட்டது.

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் மார்க்கெட்டில் நாட்டு தக்காளி கிலோ ரூ.80 முதல் ரூ.90 வரையும், கோலார், ஓசூர் தக்காளி ரூ.110 முதல் ரூ.120 வரையும் விற்பனையானது. பாவூர்சத்திரம் மார்க்கெட்டில் நேற்று முன்தினம் தக்காளி விலை ரூ.75 ஆக இருந்தது. நேற்று மேலும் ரூ.10 அதிகரித்து ரூ.85-க்கு விற்பனை செய்யப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com