பாஜக ஆட்சிக்கு எதிராக விமானத்தில் தமிழிசையை பார்த்து முழக்கமிட்ட சோபியாவுக்கு ஜாமீன்

பாஜக ஆட்சிக்கு எதிராக விமானத்தில் தமிழிசையை பார்த்து முழக்கமிட்ட சோபியாவுக்கு தூத்துக்குடி நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உள்ளது.
பாஜக ஆட்சிக்கு எதிராக விமானத்தில் தமிழிசையை பார்த்து முழக்கமிட்ட சோபியாவுக்கு ஜாமீன்
Published on

தூத்துக்குடி

சென்னையிலிருந்து தூத்துக்குடி சென்ற விமானத்தில் நேற்று சோபியா என்ற ஆராய்ச்சி மாணவி பயணம் செய்தார். அதே விமானத்தில் தமிழக பாஜக தலைவர் தமிழிசையும் பயணம் செய்தார்.

அவரை பார்த்ததும் சோபியாவுக்கு கடுங்கோபம் வந்தது. இதையடுத்து தான் பாஜகவுக்கு எதிராக கோஷமிடப் போவதாக டுவிட்டரில் தகவல் தெரிவித்துவிட்டு பாசிச பாஜக அரசு ஒழிக என கோஷமிட்டார்.

இதனால் தமிழிசை கடுங்கோபம் அடைந்தார். பின்னர் அந்த மாணவியுடன் பறக்கும் விமானத்திலேயே வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து நேற்று மாலை அந்த மாணவியை கைது செய்தனர்.

இதற்கு அரசியல் அமைப்புகளும், மாணவர் அமைப்புகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். சோபியா கைது செய்யப்பட்டது கருத்து சுதந்திரத்துக்கு எதிரானது என்று கூறி வருகின்றனர்.

சோபியாவை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது அவரை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

இந்நிலையில் அவருக்கு ஜாமீன் கோரி தூத்துக்குடி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை குற்றவியல் நீதிபதி தமிழ்ச்செல்வி முன் நடைபெற்றது.விசாரணை முடிவடைந்த நிலையில் நீதிபதி சோபியாவுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

சோபியா தூத்துக்குடி மாவட்டம் கந்தன் காலனியில் வசித்து வருகிறார். இவரது தந்தை சாமி, தாயார் மனோகரி. இவரது தந்தை தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் தலைமை மருத்துவராக இருந்து ஓய்வு பெற்றவர். தாயார் மனோகரி தலைமை செவிலியராக இருந்து ஓய்வு பெற்றவர்.

சோபியா நிறைய டிகிரி படித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜெர்மனியில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் எம்எஸ்சி இயற்பியல் படித்துள்ளார். அதன்பின் கனடாவில் எம்எஸ்சி கணிதம் படித்தார். தற்போது அவர் கனடாவில் முனைவர் பட்டம் பெற, பிஎச்டி படித்துக் கொண்டுள்ளார். கனடாவில்தான் வசித்து வருகிறார்.

இவர் கனடாவில் இருந்து விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்துள்ளார். கனடாவில் இருந்து சென்னை வந்த அவர், சென்னையில் சில திருமண நிகழ்வுகளுக்கு சென்றுள்ளார். அதன்பின், அங்கிருந்து நேரடியாக தூத்துக்குடி வந்துள்ளார். அப்போதுதான் இந்த சம்பவமும் நடந்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com