டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு எதிராக போராட்டம் நடத்த பொதுமக்களுக்கு உரிமை உண்டு ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு

டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு எதிராக போராட்டம் நடத்த பொதுமக்களுக்கு உரிமை உள்ளது என்று சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு எதிராக போராட்டம் நடத்த பொதுமக்களுக்கு உரிமை உண்டு ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
Published on

சென்னை,

சேலம் மாவட்டம் கருமலைக்கூடல் பகுதியில் டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்யக்கோரி அப்பகுதி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். அப்போது அங்கு வந்த அதிகாரிகளுக்கும், போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, கலவரமாக மாறியது.

அதையடுத்து அந்த டாஸ்மாக் கடை மீது பெண்கள் கல்வீசித் தாக்குதல் நடத்தினர். மதுபாட்டில்கள் உடைக்கப்பட்டன. இதுகுறித்து டாஸ்மாக் கடையின் விற்பனையாளர் கொடுத்த புகாரின் அடிப்படையில், கருமலைக்கூடல் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் 7-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்ட ஜெயக்குமார் என்பவர், தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் உள்ளிட்டோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

டாஸ்மாக் கடையை அமைப்பதற்கு அதே பகுதியைச் சேர்ந்த 10 பெண்கள் கடுமையான எதிர்ப்புத் தெரிவித்து, அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். இந்த பெண்கள் தங்களது குடிகார கணவர்களால் பாதிக்கப்பட்டவர்கள். அவர்கள் கோரியபடி கடையை ஆட்சேபனை இல்லாத இடத்துக்கு மாற்ற அதிகாரிகள் தயாராக இல்லாததால், கடை மீது கற்களை வீசியுள்ளனர். இதனால் 10 பெண்கள் உள்பட பலர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மதுக்கடைகளை அமைப்பது அரசின் கொள்கை முடிவுதான். அதே நேரத்தில் அதனால் ஏற்படும் விளைவுகளால் பாதிக்கப்படும் மக்கள், டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு எதிராக போராட சம உரிமை உள்ளது. இந்த வழக்கில் ஆட்சேபனைக்குரிய இடத்தில் மதுக்கடை அமைக்கப்பட்டதால், அதை எதிர்த்து பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டு தாக்குதல் நடத்தியுள்ளனர்.

உடனடியாக அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து, அதிவேகத்தில் குற்றப்பத்திரிகையை போலீசார் தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் இந்திய தண்டனை சட்டம், அத்தியாயம் 4 பிரிவு 95-ல் தரப்பட்டுள்ள மிகச்சிறிய குற்றத்தைச் செய்ததற்கான விதிவிலக்குக்குள் வருகிறார்கள்.

பொது விதிவிலக்குக்குள் வரும் இவர்களது செயல்களை குற்றமாகக் கருத முடியாது. எனவே, மனுதாரர் உள்ளிட்ட அனைவர் மீதும் கருமலைக்கூடல் போலீசார் பதிவு செய்த வழக்கை ரத்து செய்கிறேன். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com