

சென்னை,
பாராளுமன்றத்திலும், சட்ட மன்றத்திலும் பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை நிறைவேற்ற கோரி மத்திய அரசை வலியுறுத்தி மகளிர் காங்கிரஸ் சார்பில் நாடு முழுவதும் கையெழுத்து இயக்கம் நடத்தப்படுகிறது.சென்னை சத்தியமூர்த்தி பவனில் கையெழுத்து இயக்கத்தை அகில இந்திய மகளிர் காங்கிரஸ் தலைவி ஷோபா ஓஸா , பொதுச்செயலாளர்கள் நடிகை நக்மா, ஹசீனா சையத் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
பின்னர் நடிகை நக்மா நிருபர்களிடம் கூறியதாவது:-
பெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் நடத்த சோனியாவும், ராகுலும் உத்தரவிட்டுள்ளனர். அதன் படி, தமிழகத்தில் இன்று தொடங்கப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக பெண்கள் பல இடங்களில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இது மிக முக்கிய பிரச்சினையும் கூட. இந்த போராட்டத்துக்கு மகளிர் காங்கிரசின் ஆதரவு உண்டு. இதுபற்றி இன்று நடைபெறும் நிர்வாகிகள் கூட்டத்திலும் பெண்களிடம் எடுத்துக் கூறுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக சென்னை விமான நிலையத்தில் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
அரசியலுக்கு வருவது பற்றி ரஜினி தான் முடிவு எடுக்கவேண்டும். நான் ரஜினியை சந்தித்து பேசினேன். தனிக்கட்சி துவங்குவது குறித்தோ அல்லது ஏதாவது கட்சியில் இணைவது குறித்தோ அவர்தான் தீர்மானிக்கவேண்டும். அவ்வாறு அவர் அரசியலுக்கு வந்தால் காங்., கட்சி அவரை அழைக்கும். இதுதொடர்பாக அவரை சந்தித்து பேசுவேன்.இவ்வாறு அவர் கூறினார்.