குடியுரிமை சட்டத்துக்கு எதிராக கோலம் போட்டு பெண்கள் போராட்டம் கனிமொழி எம்.பி. பங்கேற்பு

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக சென்னை ஓட்டேரியில் கோலம் போட்டு பெண்கள் போராட்டம் நடத்தினர். இதில் கனிமொழி எம்.பி. பங்கேற்றார்.
குடியுரிமை சட்டத்துக்கு எதிராக கோலம் போட்டு பெண்கள் போராட்டம் கனிமொழி எம்.பி. பங்கேற்பு
Published on

சென்னை,

குடியுரிமை திருத்த சட்டம் (சி.ஏ.ஏ.), தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்.ஆர்.சி.) முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் தி.மு.க. மகளிரணியினர், பெண்கள் நேற்று வீட்டு வாசலில் கோலம் போட்டு எதிர்ப்பை பதிவு செய்தனர். அதன்படி சென்னை ஓட்டேரி வள்ளுவர் நகர், செல்லப்பா நகர் ஆகிய இடங்களில் தி.மு.க. மகளிரணியை சேர்ந்தவர்களும், அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பெண்களும் கோலம்போட்டு, தங்களுடைய எதிர்ப்பை பதிவு செய்தனர்.

வேண்டாம் சி.ஏ.ஏ.-என்.ஆர்.சி உள்ளிட்ட வாசகங்களுடன் வண்ண கோலங்கள் தெரு முழுவதும் போடப்பட்டிருந்து. இந்த கோலங்களை தி.மு.க. மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி., மாவட்ட செயலாளர் பி.கே.சேகர்பாபு எம்.எல்.ஏ. ஆகியோர் பார்வையிட்டு, ஆதரவு தெரிவித்தனர்.

அப்போது கனிமொழி எம்.பி. நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

மத்திய பா.ஜ.க. ஆட்சி எந்தவிதத்திலும் மனம் வருத்தப்பட்டு விடக் கூடாது என்பதற்காக எதிர்ப்புகளை எல்லாம் மிக மோசமாக தமிழக அரசு ஒடுக்கி கொண்டிருக்கிறது. மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் நடந்த பேரணியில் பங்கேற்றவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் 6 பேர் கோலத்தின் வழியாக தங்களுடைய எதிர்ப்பை பதிவு செய்ய முயன்றனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். மு.க.ஸ்டாலின் உள்பட தலைவர்கள் எதிர்ப்பு குரல் தெரிவித்த பின்னர் தான் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

கோலம் போட்டு கைது செய்யப்பட்ட பெண்களுக்கு ஆதரவாக மு.க.ஸ்டாலின் அறிவுரையின்படி தமிழகம் முழுவதும் தி.மு.க. மகளிரணியினர் தங்கள் வீட்டின் முன்பு கோலம் போட்டு உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டும் என்று கூறப்பட்டது. தி.மு.க.வினர் மட்டுமின்றி பெண்களும் தங்களுடைய எதிர்ப்பை காட்டக் கூடிய போராட்டமாக மாறி இருக்கிறது.

தமிழ்நாட்டில் மட்டும் அல்ல, இந்தியாவில் இருக்கும் பல பகுதிகளில் ரங்கோலி கோலம் மூலம் தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்து வருகிறார்கள். பெண்கள் கையில் போடும் மெகந்தியில் கூட வேண்டாம் சி.ஏ.ஏ.-என்.ஆர்.சி என்ற வாசகத்தை காண முடிகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு கனிமொழி எம்.பி. அளித்த பதில்கள் வருமாறு:-

கேள்வி:- கோலம் போட்டது தேச விரோத செயல். அதில் இடம் பெற்ற கருத்துகள் அலங்கோலமாக இருந்ததால் தான் அவர்கள் கைது செய்யப்பட்டனர் என்று அமைச்சர் பாண்டியராஜன் கூறியிருக்கிறாரே?

பதில்:- அவர்களுடைய பிரச்சினை கோலத்தில் இல்லை. பார்க்க கூடிய கோணத்தில் தான் இருக்கிறது. மத்திய அரசுக்கு எதிராக தமிழ்நாட்டில் யார் மூச்சு விட்டாலும் கூட, அது தேச விரோதமான செயல் என்று சொல்வார்கள்.

கேள்வி:- தமிழ்நாட்டில் கருத்து உரிமை இல்லை என்று சொல்கிறீர்களா?

பதில்:- நிச்சயமாக கருத்து உரிமையே கிடையாது. மத்திய அரசு சொல்வதை எதையும் எதிர்க்க கூடாது. அவர்கள் கொண்டு வரும் எல்லா சட்டங்களையும் ஆதரித்து தமிழக அரசு செயல்படுவது போன்று எதிர்க்கட்சிகளும், தி.மு.க.வும், எல்லா மக்களும் ஒத்து போக வேண்டும் என்று ஆட்சியில் இருப்பவர்கள் நினைக்கிறார்கள். இவ்வாறு அவர் பதிலளித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com