அரசுக்கு எதிராக தொடர்ந்து பொய் பிரசாரம் செய்தால் “மு.க.ஸ்டாலின் மீது வழக்கு தொடருவோம்” அமைச்சர் தங்கமணி பேட்டி

“தமிழக அரசு மீது தொடர்ந்து பொய் பிரசாரம் செய்து வந்தால், மு.க.ஸ்டாலின் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்படும்” என்று அமைச்சர் பி.தங்கமணி கூறினார்.
அரசுக்கு எதிராக தொடர்ந்து பொய் பிரசாரம் செய்தால் “மு.க.ஸ்டாலின் மீது வழக்கு தொடருவோம்” அமைச்சர் தங்கமணி பேட்டி
Published on

சென்னை,

தமிழக மின்சாரத்துறை அமைச்சர் பி.தங்கமணி, சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஏதோ மிகப்பெரிய ஊழல் நடந்திருப்பதை போல காற்றாலை மின்சாரம் வாங்காமல், காற்றாலை மின் உற்பத்தியாளர்களுக்கு மின்சார வாரியம் பணம் கொடுத்து ஊழல் செய்ததாக மு.க.ஸ்டாலின் ஒரு அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்.

யாரோ எழுதி தரும் அறிக்கையை உடனே வெளியிட்டுவிடாமல், அது சரியான அறிக்கையா? அதில் குறிப்பிட்டுள்ளவை சரிதானா? என்று மு.க.ஸ்டாலின் சரிபார்த்து வெளியிட வேண்டும். அவர் மக்கள் மத்தியில் தவறான பிரசாரம் செய்து வருகிறார்.

நேற்று (நேற்று முன்தினம்) கூட காற்றாலை மின்சாரத்தில் ஊழல் நடந்திருக்கிறது என்று மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார். ஊழல் நடந்ததாக அவர் குறிப்பிடும் காலம், நவம்பர்-டிசம்பர் ஆகும். இந்த ஊழல் குறித்து 29.11.2016 அன்று தலைமை பொறியாளர் அறிக்கை அனுப்பியும், அதன்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறியுள்ளார். நவம்பர்-டிசம்பர் மாத காலத்தில் காற்றாலை மின் உற்பத்தி முழுமையாக நடக்காது என்பது ஏன் அவருக்கு தெரியவில்லை?

காற்றாலை மின் உற்பத்தியை செய்யவிடாமல், அதன் உற்பத்தியாளர்களுக்கு நாங்கள் பணம் கொடுத்ததாகவும், அதன்மூலம் ரூ.9.17 கோடி ஊழல் நடந்திருப்பதாகவும் ஒரு தவறான தகவலை அவர் கூறியிருக்கிறார். எனவே அறிக்கை வெளியிடும் முன்பு உண்மை தன்மையை சரிபார்த்து அவர் அறிக்கையை வெளியிடவேண்டும்.

மு.க.ஸ்டாலின் குற்றம் சொல்லும் அளவுக்கு மின்சார வாரியம் தவறாக போய்விடவில்லை. அனல் மின் நிலையத்தில் இருந்து ஓபன் ஆக்சிஸ் முறை மூலம் மின்சாரம் பெறும் தனியார் கம்பெனிகள் தான் தவறு செய்தன. அதை கண்டுபிடித்ததே மின்சார வாரியத்தின் ஆடிட்டிங் துறை தான். இந்த தவறு கடந்த பிப்ரவரி மாதம் கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக தவறு செய்த 3 அதிகாரிகளை பதவி நீக்கம் செய்து, அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மு.க.ஸ்டாலின் கூறுவது போல தனியாருக்கு நாங்கள் ரூ.9.17 கோடியை கொடுக்கவில்லை. தனியார் அனல் மின் நிலையத்தில் இருந்து வேறு தனியார் கம்பெனிகள் மின்சாரம் வாங்கியபோது ஒரு கணக்கை காட்டியிருக்கிறார்களே தவிர, மின்சார வாரியத்தில் இருந்து எந்த பணமும் கொடுக்கவில்லை. மாறாக அந்த தனியார் கம்பெனிகளுக்கு ரூ.9.17 கோடியை வட்டியுடன் சேர்த்து ரூ.11 கோடி கேட்டு நோட்டீஸ் வழங்கியிருக்கிறோம். அவர்கள் சென்னை ஐகோர்ட்டில் தடை ஆணை பெற்றிருக்கிறார்கள். வழக்கு இன்னும் நிலுவையில் இருக்கிறது. கடந்த பிப்ரவரி மாதம் இந்த முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டு மார்ச் 17-ந் தேதி 3 அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

அனல் மின் நிலையத்தில் உற்பத்தியான மின்சாரத்தை தனியார் கம்பெனிகள் வாங்கியதில் நடந்த தவறை, மின்சார வாரியத்துடன் இணைக்க பார்க்கிறார்கள். மின்சார வாரியத்துக்கு வரவேண்டிய தொகையை செலுத்துமாறு நோட்டீஸ் தான் அனுப்பியிருக்கிறோம். எனவே உண்மைத்தன்மை தெரியாமல் காற்றாலை மின் உற்பத்தியாளர்களுக்கு நாங்கள் பணம் கொடுத்ததாக ஒரு தவறான தகவலை, ஒரு பொய் பிரசாரத்தை ஒரு எதிர்க்கட்சி தலைவராக இருப்பவர் மேற்கொண்டு வருவது கண்டனத்துக்குரியது.

மு.க.ஸ்டாலின் ஏற்கனவே நிலக்கரியில் ரூ.12 ஆயிரம் கோடி அளவில் ஊழல் நடந்திருக்கிறது என்றார். தற்போது காற்றாலை மின் உற்பத்தியில் ஊழல் என்கிறார். இதன்மூலம் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசின் மீது மக்கள் மத்தியில் ஒரு கெட்ட பெயரை ஏற்படுத்த மு.க.ஸ்டாலின் நினைத்து செயல்படுகிறார். எழுதிக்கொடுத்தவர் எதை எழுதிக்கொடுத்தாலும் அதை அப்படியே வெளியிட வேண்டாம் என்று மு.க.ஸ்டாலினை கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது தமிழ்நாடு மின் பகிர்மான மற்றும் உற்பத்தி கழகத்தின் தலைவர்-மேலாண்மை இயக்குனர் விக்ரம்கபூர், இணை மேலாண்மை இயக்குனர் பி.என்.ஸ்ரீதர் ஆகியோர் உடனிருந்தனர்.

கேள்வி:- மு.க.ஸ்டாலின் தொடர்ந்து அரக்கு எதிராக பொய் பிரசாரம் மேற்கொள்கிறார் என்கிறீர்கள், இதுகுறித்து வழக்கு தொடர திட்டமிட்டு உள்ளர்களா?

பதில்:- இதுபோல தொடர்ந்து பொய்யான பிரசாரங்களை மு.க.ஸ்டாலின் செய்து வந்தால் அவர் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்படும்.

கேள்வி:- நிலக்கரி கையிருப்பு 3 நாட்கள் தான் உள்ளது என்று பிரதமருக்கு, தமிழக முதல்-அமைச்சர் கடிதம் எழுதியிருக்கிறாரே?

பதில்:- கடந்த 15 நாட்களுக்கு முன்பு ஒடிசாவில் செய்த பெருமழை காரணமாக எந்த மாநிலத்துக்குமே நிலக்கரி அனுப்பப்படவில்லை. சில மாநிலங்களில் நிலக்கரி இருப்பே இல்லை. தமிழகத்தில் நிலக்கரி பற்றாக்குறைக்கு என்னுடைய நிர்வாகத்துறை காரணம் இல்லை. இயற்கை சீற்றம் காரணமாக நிலக்கரி எந்த மாநிலங்களுக்குமே செல்லவில்லை. அந்த பட்டியல் என்னிடம் உள்ளது. இது கவனக்குறைவால் நடந்தது இல்லை, இயற்கை சீற்றம் தான் காரணம்.

தமிழகம் மின்வெட்டு இல்லா மாநிலமாக திகழ்கிறது. தமிழக மின்சார வாரியம் மூலம் அனல் மின் நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் 4 ஆயிரத்து 320 மெகாவாட். இன்றளவும் நாங்கள் 2 ஆயிரத்து 90 மெகாவாட் அளவு தான் உற்பத்தி செய்கிறோம். ஏனென்றால் தேவை குறைவாக இருக்கிறது. வடசென்னை அனல் மின் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெறுகிறது. வருகிற 29-ந் தேதி முதல் அந்த நிலையம் மீண்டும் செயல்பட இருக்கிறது. பராமரிப்பு பணி, தேவை குறைவு போன்ற காரணங்களால் உற்பத்தி குறைவாக இருக்கிறது.

குறைந்திருந்த நிலக்கரி கையிருப்பு உயர்ந்து வருகிறது. மத்திய மந்திரியை சந்தித்த பின்னர், கடந்த 3 நாட்களாக 16 ரேக்குகளில் நிலக்கரி வருகிறது. இதைவைத்து அரசியல் செய்ய நினைத்தால் எதிர்க்கட்சிகளுக்கு ஏமாற்றம் தான்.

கேள்வி:- மின்சார துறையில் தொடர்ந்து ஊழல் குற்றச்சாட்டு ஏன் முன்வைக்கப்படுகிறது?

பதில்:- மக்கள் மீது அரசை பற்றிய தவறான கண்ணோட்டத்தை மு.க.ஸ்டாலின் ஏற்படுத்தி வருகிறார். ஊழல் குற்றச்சாட்டு பிப்ரவரியில் கண்டுபிடிக்கப்பட்டு, மார்ச் மாதம் நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் மு.க.ஸ்டாலினுக்கு இப்போதுதான் அது தெரிந்திருக்கிறது. இந்த ஊழல் குற்றச்சாட்டு அனைத்தும் பொய்யானவை தான். ஒருவேளை இது உண்மையாக இருந்தால் நானே அனைத்துக்கும் பொறுப்பேற்று கொள்கிறேன். வழக்கு கூட போடட்டும். எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன். மேற்கண்டவாறு அவர் பதில் அளித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com