ராணுவத்துக்கு ஆள் சேர்க்கும் 'அக்னிபத்' புரட்சிகரமான திட்டம்- கவர்னர் ஆர்.என்.ரவி

ராணுவத்துக்கு ஆள் சேர்க்கும் 'அக்னிபத்' புரட்சிகரமான திட்டம் என்று கவர்னர் ஆர்.என்.ரவி கூறினார்.
ராணுவத்துக்கு ஆள் சேர்க்கும் 'அக்னிபத்' புரட்சிகரமான திட்டம்- கவர்னர் ஆர்.என்.ரவி
Published on

வ.உ.சி. பிறந்த நாள் விழா

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி வந்தார். வாகைகுளம் விமான நிலையத்தில் ஆர்.என்.ரவியை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் வரவேற்றனர்.

தொடர்ந்து தூத்துக்குடி காமராஜ் கல்லூரி வளாகத்தில் விவேகானந்தா கேந்திரம் சார்பில் வ.உ.சி.யின் 150-வது பிறந்த நாள் விழா நடந்தது. கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திரம் துணை தலைவர் நிவேதிதா தலைமை தாங்கினார். தஞ்சாவூர் ராமகிருஷ்ணா மடத்தலைவர் சுவாமி விமூர்தானந்தா தொடக்க உரையாற்றினார். கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு, மாவட்டத்தில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய 8 பேருக்கு வ.உ.சி. விருதுகளை வழங்கியும், வ.உ.சி.யின் 150-வது ஆண்டு விழா மலரை வெளியிட்டும் பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

இளம் தொழில் முனைவோர்

சனாதன தர்மத்தின் மூலமாகவே இந்தியாவின் வளர்ச்சி அமையும். சனாதன தர்மத்தின் மூலமாகவே பாரதம் கட்டமைக்கப்பட வேண்டும். இந்த தேசம் எழுச்சி பெற்று வருகிறது. நாடு தன்னுடைய சுய பலத்தை தற்போது உணர்ந்து உள்ளது.

நாட்டின் முன்னேற்றத்திற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் காரணமாக இளம் தொழில் முனைவோர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.

'அக்னிபத்' திட்டம்

இளைஞர்களால் தான் நாட்டின் வளர்ச்சி உள்ளது. அரசால் மட்டும் நாட்டின் வளர்ச்சியை ஏற்படுத்த முடியாது. ஒரே பாரதம், உன்னத பாரதம், தற்சார்பு பாரதம் என்பது நமது முழக்கமாக இருக்க வேண்டும்.

அரசின் ஒவ்வொரு நல்ல திட்டங்களும், நடவடிக்கைகளும் சிலரால் தவறாக கொண்டு செல்லப்படுகிறது. இளைஞர்களுக்காக வெளிப்படை தன்மையுடன் கொண்டு வரப்பட்ட ராணுவத்துக்கு ஆள் சேர்க்கும் 'அக்னிபத்' திட்டம் இளைஞர்களுக்கு வரப்பிரசாதமாகும்.

ஆனால், இந்த திட்டத்திற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இது புரட்சிகரமான திட்டம் ஆகும். 4 ஆண்டுகளில் இளைஞர்கள் அவர்களின் நிலையை உயர்த்துவதில் முக்கிய பங்காற்றும். இளைஞர்களுக்கு 'அக்னி பத்' திட்டம் தன்னம்பிக்கையையும், சுய ஒழுக்கத்தையும் மேம்படுத்தும். இதன் மூலம் அவர்கள் ஒழுக்கம் மிக்கவர்களாக மாறுவர்.

முறியடிப்போம்

இந்த திட்டத்தில் பணியாற்றி வெளியே வருபவர்களுக்கு அரசிலும், தனியார் துறையிலும் வேலை வாய்ப்பு முன்னுரிமை கிடைக்கும். இளைஞர்களின் உழைப்பால் 2047-ம் ஆண்டில் இந்தியா உலகத்தின் முதன்மை நாடாக மாறும். நாட்டின் வளர்ச்சிக்கு இளைஞர்கள் உதவ வேண்டும். அதை விடுத்து தவறான வழியில் செல்லக் கூடாது. இந்தியாவின் வளர்ச்சியை தடுப்பதற்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பலர் செயல்பட்டு வருகிறார்கள். அவர்களின் சதித்திட்டத்தை அனைவரும் இணைந்து முறியடிப்போம்.

இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com