ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பந்தம்: திருப்பூர் ஆயத்த ஆடை வர்த்தகம் 2 மடங்கு அதிகரிக்க வாய்ப்பு

இந்தியாவில் ஆடைத்துறையில் புதிய முதலீடு மற்றும் வேலைவாய்ப்புகள் பெருகும்.
ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பந்தம்: திருப்பூர் ஆயத்த ஆடை வர்த்தகம் 2 மடங்கு அதிகரிக்க வாய்ப்பு
Published on

திருப்பூர்,

இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடன் வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதன் மூலம் ஆயத்த ஆடைகளை இந்தியாவில் இருந்து குறிப்பாக திருப்பூரில் இருந்து வரியில்லாமல் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு அனுப்பி வைக்க முடியும். இதனால் ஆயத்த ஆடைத்துறையினர் அதிக உற்சாகம் அடைந்துள்ளனர்.

இந்த ஒப்பந்தத்தை ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (ஏ.இ.பி.சி.) வரவேற்றும், பிரதமருக்கும், மத்திய வர்த்தக தொழில்துறை மந்திரிக்கும் நன்றியையும் தெரிவித்துள்ளது. இது உலகின் மிகப்பெரிய வர்த்தக கட்டமைப்புடன் இந்தியாவுக்கு நீண்டகால வணிக உறவை உருவாக்கும்.

இந்திய ஆடைத்துறைக்கு ஒரு மைல்கல்லாக அமையும். இந்த ஒப்பந்தம் அடுத்த 3 ஆண்டுகளில் இந்திய ஆயத்த ஆடை ஏற்றுமதியை இரட்டிப்பாக்கும். இந்தியாவில் ஆடைத்துறையில் புதிய முதலீடு மற்றும் வேலைவாய்ப்புகள் பெருகும். இதன் மூலம் ஆண்டுக்கு 20 முதல் 25 சதவீதம் ஆயத்த ஆடைத்துறை வளர்ச்சி பெறும்.

இந்திய ஆயத்த ஆடை ஏற்றுமதியில் ஐரோப்பிய ஒன்றியத்தின் பங்கு 28 சதவீதமாக உள்ளது. ஆனால் ஐரோப்பிய ஆடை சந்தையில் இந்தியாவின் பங்களிப்பு 2.9 சதவீதம் மட்டுமே. இந்த ஒப்பந்தம் மூலம் இந்திய ஆயத்த ஆடைத்துறை பெரிதும் பயன்பெறும் என்று ஏ.இ.பி.சி. தெரிவித்துள்ளது.

இதுகுறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

இந்தியா-ஐரோப்பிய கூட்டமைப்புகளுக்கிடையே வரியில்லா வர்த்தக ஒப்பந்தம், இன்னும் ஒரு வருட காலத்துக்குள் அமலுக்கு வர இருக்கிறது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஜவுளித்துறை அதிகம் பயன்பெறும். ஏற்கனவே திருப்பூரில் இருந்து ஆண்டுக்கு ரூ.25 ஆயிரம் கோடி வர்த்தகம் நடக்கிறது. இந்த ஒப்பந்தம் காரணமாக, ஐரோப்பிய நிறுவனங்கள் இந்தியாவை நோக்கி திரும்பும்போது வர்த்தக வாய்ப்புகள் பலமடங்கு பெருகும்.

அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்பால் தற்காலிக பின்னடைவை சந்தித்த திருப்பூர், இந்த ஒப்பந்தம் காரணமாக நம்பிக்கை பெற்றுள்ளது. 2030-ம் ஆண்டுக்குள் திருப்பூரில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கான ஆயத்த ஆடை ஏற்றுமதி இருமடங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com