வேளாண் வணிகத் திருவிழா முன்னேற்பாடுகள் - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆய்வு

வேளாண் வணிகத் திருவிழாவில் 300-க்கும் மேற்பட்ட வேளாண் விளைபொருட்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளன.
சென்னை,
சென்னை தலைமைச் செயலகத்தில் வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் வேளாண் வணிகத் திருவிழா முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-
“தமிழ்நாடு முதல்-அமைச்சர் வேளாண் வணிகத் திருவிழாவினை சென்னை, நந்தம்பாக்கத்தில் 27.09.2025 அன்று தொடங்கி வைக்க உள்ளார். இவ்விழா 27.09.2025 மற்றும் 28.09.2025 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது. இவ்வேளாண் வணிகத் திருவிழாவில் 200-க்கும் மேற்பட்ட உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் அங்காடிகள், 300-க்கும் மேற்பட்ட வேளாண் விளைபொருட்கள் மற்றும் மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளன.
பாரம்பரிய இயற்கை உணவு திருவிழாவும் இதில் இடம்பெறுகிறது. மேலும் விவசாயிகள் விஞ்ஞானிகள் கலந்துரையாடல் மற்றும் அரசுத் திட்டங்கள் பெற முன்பதிவு நடைபெற உள்ளது. இவ்வேளாண் வணிகத் திருவிழா முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம், சென்னை தலைமைச் செயலகத்தில் வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் இன்று (19.09.2025) நடைபெற்றது.
இக்கூட்டத்தில் வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயலாளர் வ.தட்சிணாமூர்த்தி, வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை ஆணையர் த.ஆபிரகாம், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குநர் பி.குமரவேல் பாண்டியன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






