

சென்னை,
மாதம் தோறும் 200 யூனிட் இலவச மின்சாரம் என்ற பித்தலாட்டத்தை தொடர்ந்து, விவசாய பயிர்க்கடன் தள்ளுபடி என்பதும் ஏமாற்று வேலையே என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
5 ஏக்கருக்கு குறைவாக நிலம் வைத்துள்ள விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற பயிர்க்கடன்கள் முற்றிலுமாக தள்ளுபடி செய்யப்படும் என தேர்தலுக்கு முன்பாக வாக்குறுதியளித்த தவெக, ஆட்சிக்கு வந்தவுடன் விவசாயிகள் பெற்ற கடன் தொகைக்கு ஏற்ப தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்திருப்பது ஒட்டுமொத்த குறு, சிறு விவசாயிகளுக்கும் இழைக்கப்பட்ட துரோகம்.
இரண்டரை ஏக்கர் வரை சாகுபடி செய்ய விவசாயிகள் சுமார் 3 லட்சம் வரை கடன் பெற்றிருக்கும் நிலையில், 50 ஆயிரம் ரூபாய் வரை கடன் பெற்ற விவசாயிகளுக்கு மட்டுமே முழுமையான தள்ளுபடி எனவும், ஒரு லட்சம் ரூபாய்க்கு அதிகமான கடன் பெற்றிருக்கும் விவசாயிகளுக்கு வெறும் 5,000 ரூபாய் மட்டுமே தள்ளுபடி எனவும் அரசு அறிவித்திருப்பதற்கு டெல்டா பாசன விவசாய சங்க கூட்டமைப்பு தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.
எனவே, தேர்தலுக்கு முன்பாக தவெக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள வாக்குறுதியின்படி தமிழகம் முழுவதும் 5 ஏக்கருக்கு குறைவாக நிலம் வைத்துள்ள குறு, சிறு விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்யை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.