ரூ.20 லட்சத்தில் விவசாயிகளுக்கு வேளாண் எந்திரங்கள்

நீலகிரியில் ரூ.20 லட்சத்தில் விவசாயிகளுக்கு வேளாண் எந்திரங்கள் வழங்கப்பட்டு வருகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
ரூ.20 லட்சத்தில் விவசாயிகளுக்கு வேளாண் எந்திரங்கள்
Published on

ஊட்டி

நீலகிரியில் ரூ.20 லட்சத்தில் விவசாயிகளுக்கு வேளாண் எந்திரங்கள் வழங்கப்பட்டு வருகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

வேளாண் எந்திரங்கள்

வேளாண் எந்திரமயமாக்கல் திட்டத்தின் கீழ், 2023-20240-ம் ஆண்டில் நீலகிரி மாவட்டத்திற்கு 50 சதவீத மானியத்தில் ரூ.20 லட்சம் மதிப்பில் 27 வேளாண் எந்திரங்கள் (பவர் டில்லர்) விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளது. முதல் கட்டமாக ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் 12 பேருக்கு வேளாண் எந்திரங்கள் நேற்று முன்தினம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு வேளாண்மை பொறியியல் துறை நிர்வாக பொறியாளர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். இதில் உதவி செயற்பொறியாளர் ஜெயபிரகாஷ் மற்றும் விவசாயிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இதுகுறித்து நிர்வாக பொறியாளர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-

முதல் கட்டமாக உழவன் செயலியில் பதிவு செய்த விவசாயிகள் 12 பேருக்கு வேளாண் எந்திரங்கள் வழங்கப்பட்டு உள்ளது. இதேபோல் இந்த திட்டத்தின் கீழ் உள்ள மற்ற கருவிகளையும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

விதை தெளிப்பான்

வேளாண் எந்திரமயமாக்கல் திட்டத்தின் கீழ் சிறு, குறு விவசாயிகள், பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு ஒரு பிரிவிலும், இதர விவசாயிகளுக்கு மற்றொரு பிரிவிலும் டிராக்டர், நாற்று நடும் எந்திரம், சுழல் கலப்பை, விதை தெளிப்பான் என விவசாயத்தை எளிமையாக்கும் மேலும் சில கருவிகள் வேளாண் பொறியியல் துறையின் ஒப்புதல் பெற்ற நிறுவனங்கள் மானிய விலையில் வழங்கப்படுகிறது.

இதை பெற விரும்பும் விவசாயிகள், தமிழக அரசின் உழவன் செயலியில் ஆதார் எண்ணை பதிவு செய்து விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தில் கேட்கப்படும் விவரங்களை பூர்த்தி செய்த பின்னர், மத்திய அரசினுடைய www.agrimachinery.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பம் இணைக்கப்படும். தொடர்ந்து விண்ணப்பித்த விவசாயிகளின் விவரங்கள் வேளாண் பொறியியல் துறையில் பதிவு செய்யப்பட்டு, முன்னுரிமை அடிப்படையில் துறையில் இருந்து இதற்கான அனுமதி வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com