தமிழக சட்டசபையில் இன்று வேளாண் பட்ஜெட் தாக்கல்

வேளாண் துறை அமைச்சர் ஆர்.வினோத், 2026-27-ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கிறார்.
தமிழக சட்டசபையில் இன்று வேளாண் பட்ஜெட் தாக்கல்
Published on

சென்னை,

தமிழக சட்டசபையில் இன்று (வியாழக்கிழமை) வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது.

வேளாண் பட்ஜெட்

தமிழக சட்டசபையில் நேற்று 2026-27-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.

இந்த நிலையில், இன்று தமிழக சட்டசபையில் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. காலை 10 மணிக்கு தொடங்கும் கூட்டத்தில், வேளாண் துறை அமைச்சர் ஆர்.வினோத், 2026-27-ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கிறார்.

வேளாண் துறைக்கு ரூ.14,984 கோடி ஒதுக்கீடு

நேற்றைய பொது பட்ஜெட்டில் வேளாண் மற்றும் உழவர் நலத் துறைக் ரூ.14,984 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் நலன் சார்ந்த பல்வேறு திட்டங்கள் வேளாண் பட்ஜெட்டில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாளை (7-ந் தேதி) முதல் 3 நாட்கள் பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறுகிறது. வரும் 12-ந் தேதி பட்ஜெட் மீதான விவாதத்திற்கு பதில் அளித்து நிதி அமைச்சர் மரிய வில்சன், வேளாண் துறை அமைச்சர் வினோத் ஆகியோர் பேச இருக்கின்றனர்.

பரபரப்புக்கு பஞ்சமிருக்காது

அதனைத் தொடர்ந்து, வரும் 17-ந் தேதி முதல் துறை வாரியாக மானியக் கோரிக்கை விவாதம் நடைபெறுகிறது. இந்த விவாதம் செப்டம்பர் 8-ந் தேதி நிறைவடைகிறது.

இந்த பட்ஜெட் கூட்டத் தொடரில் தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப திட்டமிட்டுள்ளனர். எனவே, இந்த பட்ஜெட் கூட்டத் தொடரில் பரபரப்புக்கும், விறுவிறுப்புக்கும் பஞ்சமிருக்காது என்றே தெரிகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com