

சென்னை,
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் வருகிற 23-ந்தேதி நடைபெறுகிறது. அனைவரும் வாக்களிக்க வேண்டும். பொதுமக்கள் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என்று தேர்தல் ஆணையம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.
100 சதவீத வாக்குப்பதிவை நிறைவேற்ற வேண்டும் என்பதில் உறுதியாக உள்ள தேர்தல் ஆணையம் அதற்கான விழிப்புணர்வு பிரசாரங்களை தமிழக முழுவதும் செய்து வருகிறது.
மக்கள் கூட கூடிய பொது இடங்கள், பூங்காக்கள், பஸ் நிலையம், கடற்கரை, மால்கள் உள்ளிட்ட இடங்களில் கிராமிய கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகளுடன் பல்வேறு வகையில் தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
இது தவிர 23-ந்தேதி அரசு பொது விடுமுறை விடப்பட்டுள்ளது. அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு கட்டாயம் விடுமுறை அளிக்க வேண்டும் என்று தொழிலாளர் நலத்துறை அறிவித்துள்ளது. விடுப்பு அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளது.
இந்தநிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் நிறுவனங்களும் ஊழியர்களுக்கு விடுமுறை அளித்து உள்ளது. இதனால் ஓட்டு போடுவதற்காக சொந்த ஊருக்கு செல்ல தொழிலாளர்கள் தயாராகி வருகிறார்கள்.
குறிப்பாக சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தங்கி வசிக்கும் தனியார் ஊழியர்கள் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு சென்று வாக்களிக்க வேண்டும் என்ற அடிப்படையில் அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
இந்தநிலையில், சட்டசபை தேர்தலை முன்னிட்டு, சொந்த ஊருக்கு சென்று வாக்களிக்க வசதியாக ஏப்.21, 22, 23 ஆகிய 3 நாட்களுக்கும் சேர்த்து 10,663 பஸ்கள் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. சென்னையிலிருந்து தினசரி இயக்கக்கூடிய 2,092 பேருந்துகளுடன், 5,574 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.