சமூக வலைதளங்களில் ‘டிரெண்ட்' ஆகும் ஏ.ஐ. 3டி புகைப்படங்கள்


சமூக வலைதளங்களில் ‘டிரெண்ட் ஆகும் ஏ.ஐ. 3டி புகைப்படங்கள்
x

‘ஜெமினி 2.5 பிளாஷ் இமேஜ் டூலில்’ புகைப்படத்தை பதிவேற்றம் செய்தால், 10 முதல் 30 வினாடிகளில் இந்த 3டி புகைப்படமாக உருவாக்கி கொடுத்து விடுகிறது.

சென்னை,

செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்பம் சமீப காலங்களாக நம் அனைவரையும் கட்டுப்படுத்தி வைத்து இருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது. சமீபத்தில் ‘சாட் ஜி.பி.டி.’ என சொல்லப்படும் செயற்கை நுண்ணறிவு தளம் உருவாக்கிய ‘‘ஜிப்லி'' புகைப்படம் சமூக வலைதளங்களில் ‘டிரெண்ட்’ ஆனது. இதனை பார்த்த பலரும் தங்களுடைய புகைப்படங்களை ‘ஜிப்லி’ புகைப்படமாக மாற்றி சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்து பகிர்ந்தனர்.

இதன் தொடர்ச்சியாக தற்போது ‘ஜெமினி ஏ.ஐ.’ மூலம் உருவாக்கப்படும் ‘நானோ பனானா’ என்ற ‘ஹை டீட்டெயில்டு 3டி பிக்யூரின்’ புகைப்படங்கள் (மினியேச்சர் சிலைகள்) சமூக வலைதளங்களை ஆக்கிரமித்து வருகிறது. ‘ஜெமினி 2.5 பிளாஷ் இமேஜ் டூலில்’ புகைப்படத்தை பதிவேற்றம் செய்தால், 10 முதல் 30 வினாடிகளில் இந்த 3டி புகைப்படமாக உருவாக்கி கொடுத்து விடுகிறது.

அதுமட்டுமல்லாமல், சில தகவல்களை உள்ளீடு செய்து அது சார்ந்த புகைப்படங்களை தரச்சொன்னாலும் அதையும் 3டி புகைப்படமாக வழங்குகிறது. மேலும் ‘செல்பி’ புகைப்படங்களை ‘அனிமேஷன் ஹீரோ’க்கள், ‘சைபர்பங்க்’ அவதாரங்கள் உள்ளிட்ட பல்வேறு ‘ஸ்டைல்’களில் மாற்றவும் முடியும்.

இந்த மென்பொருள் இலவசமாக இதை செய்து கொடுக்கிறது, எளிமையாகவும், வேகமாகவும் வழங்குகிறது என்பதால் அனைவரும் இதனை முயற்சிக்க தொடங்கி இருக்கிறார்கள்.

அந்த வகையில் அரசியல் பிரமுகர்கள், முக்கிய தலைவர்கள், சினிமா பிரபலங்கள், விலங்குகளின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் ‘டிரெண்ட்’ ஆகி வருவது குறிப்பிடத்தக்கது. இதனை பார்க்கும் பலரும் “ஏதோ டிரெண்டாமே'' நாமும் பதிவிடுவோம் என ‘கமெண்ட்' போட்டு தங்களுடைய படத்தை பகிர்ந்து வருகின்றனர்.

1 More update

Next Story