

சென்னை,
நூலக புத்தகங்களில் கூட ஏ.ஐ.யை பயன்படுத்தி ஊழல் செய்திருக்கிறார்கள் என்று முதல்-அமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.
தவெக சார்பில் 2-ம்கட்ட கல்வி விருது வழங்கும் விழா சென்னை நீலாங்கரையில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் கலந்து கொண்ட முதல்-அமைச்சரும், தவெக தலைவருமான விஜய் தலைமை உரையாற்றியானார். அப்போது அவர் கூறியதாவது:-
என் நெஞ்சில் குடியிருக்கும் எனது அன்பான நண்பா, நண்பீஸ் உங்கள் அனைவருக்கும் என்னுடைய வணக்கம். ஒரேயொரு விஷயம் சொல்ல நினைக்கிறேன். இதை சிலர் அரசியலாக்க முயற்சி செய்வார்கள். அதைப் பற்றி எல்லாம் கவலையில்லை. உங்களிடம் இதை சொல்லியே ஆக வேண்டும். இது மாணவர்கள் சம்பந்தப்பட்ட விஷயம். வாழ்க்கையில் எங்கெல்லாம், எப்போதெல்லாம் நீங்கள் உஷாராக இருக்க வேண்டும் என்று தெரிந்து கொள்ள வேண்டும்.
ஊழல்; பழைய விஷயம் தான். மக்கள் எல்லாரும் அதற்கு பழகிப் போய்விட்டார்கள் என்று கடந்து போய் விட முடியாது. அது ஒரு நாள்பட்ட நோய் போன்றது. அதை சரிசெய்வதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அதை நாம் செய்துதான் ஆக வேண்டும். அதை சரிசெய்ய முடியுமா என்று சிலர் கேள்வி கேட்பார்கள். முடிந்தவரை அதை கட்டுப்படுத்த நாம் முயற்சி எடுக்க வேண்டும். அப்படி நான் எடுத்த சில முயற்சிகளால் தான் சிலரின் அடித்தளமே ஆடிப்போய் கிடக்கிறது.
சமீபத்தில் நடந்த ஊழல் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். கல்வித்துறையில் ஊழல் நடந்தால் அதை பார்த்துக்கொண்டு எப்படி சும்மா இருக்க முடியும்? எந்த துறைகளில் தவறு நடந்தாலும் தவறு தவறுதான். கல்வித்துறைதானே அடித்தளம். எல்லாவற்றையும் விட அதுதானே முக்கியம். எதிர்காலம் மாணவர்கள் தானே. பள்ளிகளின் பாதுகாப்பில் விளையாடி இருக்கிறார்கள். எப்படி பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியும்?
மாணவர்கள் படிக்கும் நூலக புத்தகங்களில் கூட ஏ.ஐ.யை பயன்படுத்தி ஊழல் செய்திருக்கிறார்கள். இவர்களை என்ன செய்வதென்றே தெரியவில்லை. கோவை பெரியார் அறிவுலகத்தில் இப்படி ஒரு முறைகேடு நடந்திருக்கிறது. இன்னும் பிற நூலகங்களில் என்னென்ன நடந்திருக்கிறதோ? ஒவ்வொன்றாக வெளியில் வரும். இதெல்லாம் அறிவுலகமா? அல்லது ஊழல் உலகமா என்று தெரியவில்லை.
என்னுடைய நண்பா, நண்பீஸ், உங்களுடைய அண்ணன், உங்களை நல்ல வழியில் மட்டும்தான் நடத்திக் கொண்டு போவேன். தைரியமாக இருங்கள். நல்லதே நடக்கும். நல்லது மட்டுமே நடக்கும். நன்றி. இவ்வாறு அவர் கூறினார்.