

தாம்பரம்,
சென்னையை அடுத்த பல்லாவரம் அருகே உள்ள பொழிச்சலூர் பகுதியை சேர்ந்த திருமணமான இளம்பெண் ஒருவர், பெருங்களத்தூர் பகுதியில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
இந்த நிலையில், அவரது பள்ளி நண்பர் ஒருவர், இளம்பெண்ணின் வீட்டுக்கு சென்று, “உங்கள் இன்ஸ்டாகிராம் ஐ.டி.யில் இருந்து ஆபாச புகைப்படங்கள் மற்றும் குறுந்தகவல்கள் பரவி வருகிறது" என்று தெரிவித்தார்.
அதிர்ச்சி அடைந்த இளம்பெண், நண்பரின் செல்போனை வாங்கி பார்த்தபோது, அவரது புகைப்படங்களை மர்மநபர் ஒருவர் மார்பிங் செய்து, வேறொரு ஆணுடன் நெருக்கமாக இருப்பது போலவும், ஆபாசமாகவும் சித்தரித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தது தெரிய வந்தது. மேலும், அந்த பதிவுகளில் பெண்ணின் வீட்டு முகவரியும் இணைக்கப்பட்டு, "தேவைப்பட்டால் அணுகலாம்" என விளம்பரப்படுத்தப்பட்டிருந்தது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண், சங்கர் நகர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சைபர் கிரைம் உதவியுடன் விசாரணை நடத்தினர். விசாரணையில், அந்த போலி இன்ஸ்டாகிராம் கணக்கை பயன்படுத்தியது பொழிச்சலூர் பகுதியை சேர்ந்த கவுரிசங்கர் (34 வயது) என்பதும், அவர் பாதிக்கப்பட்ட பெண் வேலை செய்யும் அதே ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிவதும் தெரிய வந்தது.
போலீசார் கவுரிசங்கரை பிடித்து விசாரித்தபோது, அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்சினையால் ஆத்திரமடைந்து, அந்த பெண் வாட்ஸ்அப்பில் வைத்திருந்த டி.பி. புகைப்படங்களை எடுத்து, ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் அவர்கள் இருவரும் சேர்ந்து இருப்பதுபோல் ஆபாசமாக மார்பிங் செய்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உருவாக்கி வெளியிட்டதாக ஒப்புக்கொண்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கவுரி சங்கரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.