கொடுக்கவும் செய்யும், பறிக்கவும் செய்யும் ஏ.ஐ.

என்ஜினீயர்கள் பல நாட்கள் ஒன்றாக உட்கார்ந்து சாப்ட்வேரை உருவாக்க எழுதும் கோடிங்கை ஏ.ஐ. ஒரு சில நிமிடங்களிலேயே உருவாக்கி தந்து விடுகிறது.
கொடுக்கவும் செய்யும், பறிக்கவும் செய்யும் ஏ.ஐ.
Published on

ஐ.டி. எனப்படும் தகவல் தொழில்நுட்பத்துறை கடந்த 2000-ம் ஆண்டில் இருந்து தலையெடுக்க தொடங்கியது. அதன் பிறகுதான் வேலைவாய்ப்பில் இளைஞர்களுக்கு பொற்காலம் பிறந்தது. வேலைவாய்ப்பு அள்ள, அள்ள குறையாத அளவுக்கு அட்சய பாத்திரமாக திகழ்ந்தது. மற்ற பணிகளைவிட இந்த துறையில் கைநிறைய சம்பளம் கிடைத்தது. இளைஞர்களின் வெளிநாட்டு கனவுகளையும் நனவாக்கியது. 1998-ம் ஆண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தகவல் தொழில்நுட்பத்தின் பங்கு 1.2 சதவீதம்தான் இருந்தது. ஆனால் இப்போது இதன் பங்களிப்பு 10 சதவீதத்தை தாண்டுகிறது. இந்தியாவில் சேவைத்துறை ஏற்றுமதியில் ஐ.டி. துறைதான் முதல் இடத்தில் இருக்கிறது. தற்போது ஐ.டி. துறையின் மூலம் ஏறத்தாழ 54 லட்சம் பேர் நேரடி வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர்.

இந்திய பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் இந்த துறை, இப்போது புதிதாக காலடி எடுத்து வைத்திருக்கும் செயற்கை நுண்ணறிவு காரணமாக ஆட்டத்தை கண்டுள்ளது. இதனால் ஐ.டி. துறை நிச்சயமாக வீழ்ந்து விடாது. அது தன் பரிணாம வளர்ச்சியில் மாற்றத்தை காணுகிறது. இவ்வளவு காலமும் ஐ.டி. நிறுவனங்களில் பல நூறு என்ஜினீயர்கள் சேர்ந்து உருவாக்கும் சாப்ட்வேர்களை, இப்போது ஏ.ஐ.யே. அதாவது செயற்கை நுண்ணறிவே அந்த மென்பொருளை உருவாக்குவதற்கான கோடிங்கை மனிதன் பிறப்பிக்கும் கட்டளையை ஏற்று எழுதிவிடுகிறது. என்ஜினீயர்கள் பல நாட்கள் ஒன்றாக உட்கார்ந்து சாப்ட்வேரை உருவாக்க எழுதும் கோடிங்கை ஏ.ஐ. ஒரு சில நிமிடங்களிலேயே உருவாக்கி தந்து விடுகிறது. இதனால் இப்போது ஏராளமானவர்கள் வேலை இழக்கும் அபாயத்தை எதிர்நோக்கி இருக்கிறார்கள்.

ஐ.டி. துறையில் உலகம் முழுவதும் கடந்த ஆண்டு மட்டும் சுமார் 3 லட்சம் பேர் வேலை இழந்துள்ள நிலையில், இந்தாண்டு அதாவது கடந்த 4 மாதங்களில் மட்டும் சுமார் 85 ஆயிரம் பேர் வேலையை பறிகொடுத்துள்ளனர். இதில் ஆரக்கிள் நிறுவனம் சமீபத்தில் சுமார் 30 ஆயிரம் இளைஞர்களை பணிநீக்கம் செய்ததும் அடங்கும். கூகுள், மைக்ரோசாப்ட், மெட்டா ஆகிய பெரிய நிறுவனங்களும் கூட பணிநீக்க நடவடிக்கையை செய்துவருகின்றன. இதுமட்டுமல்லாமல் பல நிறுவனங்கள் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கதவுகளை விசாலமாக வைத்த நிலை இப்போது இல்லை. அவர்கள் பணிக்கு ஆள் எடுப்பதையே குறைத்துவிட்டார்கள். ஆக வேலைவாய்ப்பே பறிபோய்விட்டது என்று பதறவேண்டிய அவசியம் இல்லை.

ஆரம்பத்தில் கம்ப்யூட்டர் வந்த நேரத்தில் பலர் வேலை இழந்தாலும், கம்ப்யூட்டர் கற்றுக்கொண்ட எண்ணற்றவர்களுக்கு புதிதாக வேலைவாய்ப்பை வாரி வாரி வழங்கியது. அதுபோல ஏ.ஐ. தொழில்நுட்பம் இப்போது வேலைவாய்ப்புகளை பறித்தாலும், விரைவில் ஏ.ஐ. தொழில்நுட்பம் தெரிந்த 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கொடுக்கப்போகிறது என்று மகிழ்ச்சியான செய்தியை நாஸ்காம் என்ற தேசிய சாப்ட்வேர் மற்றும் சேவை நிறுவனங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. ஆக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக்கான ஒளிவிளக்கு தெரிந்துவிட்டது. எதிர்காலத்தில் ஏ.ஐ. படித்தவர்களுக்குத்தான் நல்ல வேலை, கைநிறைய சம்பளம் என்ற நிலை உருவாகப்போகிறது. எனவே மத்திய, மாநில அரசுகள் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் மட்டுமல்லாமல் பள்ளிகளில் இருந்தே ஏ.ஐ.யை பாடத்திட்டத்தில் சேர்க்கவேண்டும். அதுதொடர்பான படிப்புகளை தொடங்கவேண்டும். எதிர்காலம் எங்கள் கையில், இந்த தேசம் எங்கள் பையில் என்று உரக்க சொல்லும் ஏ.ஐ.யை அனைவரும் தெரிந்து கொள்வதற்கான வாய்ப்பு உருவாக்கப்படவேண்டும்.

X

Daily Thanthi
www.dailythanthi.com