அதிமுக 55-வது ஆண்டு விழா; தனித்தனியாக கொண்டாடிய ஈபிஎஸ்-எஸ்.பி.வேலுமணி அணி

அதிமுக 55-வது ஆண்டு விழாவில் பங்கேற்க வருமாறு எஸ்.பி.வேலுமணி அணியினருக்கு எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்தார்.
ஈபிஎஸ்-எஸ்.பி.வேலு மணி அணி
Published on: 

சென்னை,

அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி (EPS) தலைமைக்கும், எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.வி.சண்முகம் தலைமையிலான அதிருப்தி குழுவிற்கும் இடையே உட்கட்சி பூசல் தீவிரமடைந்துள்ளது

தமிழக சட்டசபை நடைபெறுவதற்கு முன்பே அதிமுகவுடன், தவெக கூட்டணி வைக்க முயன்று வந்ததாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அக்கூட்டணி உறுதி செய்யப்படவில்லை. இதனைத்தொடர்ந்து தேர்தல் நெருங்க நெருங்க அதிமுகவையும் விமர்சனம் செய்யத் தொடங்கினார் தற்போதைய முதல்-அமைச்சர் விஜய்.

இதனால் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் விஜயை தாக்கிப் பேச ஆரம்பித்தார். இதனைத்தொடர்ந்து நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் அனைத்துக் கட்சிகளுமே எதிர்பாரா முடிவுகள் வெளியாகின. தவெக ஆட்சியை பிடித்தது, திமுக எதிர்க்கட்சியாக அமர்ந்தது. அதிமுக முதல் முறையாக மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டது.

இது எடப்பாடி பழனிசாமிக்கு பெரும் இடியாக அமைந்தது. அதிமுக எதிர்பாராத தோல்வியை சந்திக்க 2022க்கு பிறகு, மீண்டும் கட்சியில் உட்கட்சி பூசல் வெடித்தது. தோல்விக்கு எடப்பாடி பழனிசாமி தான் காரணம் என முக்கிய நிர்வாகிகள் குற்றம் சாட்டத் தொடங்கினர். சிலர் கட்சியில் இருந்து விலகி ஆட்சியை பிடித்த தவெக பக்கம் தாவினர்.

தலைமையான இபிஎஸ்-இன் பேச்சை மீறி தவெகமீதான நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்திற்கும் வாக்களித்தனர். இதனால் வாக்களித்த 25 சட்டமன்ற உறுப்பினர்களில் முக்கியமான நிர்வாகிகளின் பதவியை இபிஎஸ் பறித்தார்.

இது கட்சிக்குள் இன்னும் சலசலப்பை ஏற்படுத்த, எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வந்தான், சி.வி.சண்முகம் உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் ஒரு அணியாக திரண்டனர்.

இந்த அணியின் தலைமையின்கீழ் சில சட்டமன்ற உறுப்பினர்கள் சென்றனர். பின்னர் நாட்கள் செல்ல செல்ல கட்சிக்குள் உட்பூசலின் தீவிரம் கொஞ்சம் குறைந்தது. அதனைத்தொடர்ந்து இபிஎஸ் மீண்டும் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோருக்கு பதவி வழங்கினார்.

ஆனால் பறிக்கப்பட்ட மாவட்டச் செயலாளர் பதவி வழங்கப்படவில்லை. இதனால் அதன்பின் நடந்த கட்சியின் முக்கிய ஆலோசனைக் கூட்டங்களில் எஸ்.பி.வேலுமணி தரப்பினர்கள் கலந்துக்கொள்ளவில்லை.

இந்த சூழலில் தாராபுரம், மதுராந்தகம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வந்தது. இந்த இரண்டு தொகுதிகளுமே அதிமுக கோட்டையாக இருந்தது. இடைத்தேர்தலையொட்டி அதிமுக தரப்பில் இருந்து இபிஎஸ் மட்டுமே பிரசாரத்தில் ஈடுபட்டார். மற்ற முக்கிய நிர்வாகிகள் யாரும் பெரிதாக தேர்தல் பணிகளில் ஈடுபடவில்லை.

இச்சூழலில் இடைத்தேர்தலிலும் கட்சி தோல்வி அடைந்துள்ளதால், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் தலைமைக்கு எதிராக அதிருப்தி அணியினர் மீண்டும் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

தேர்தல் தோல்விக்கு காரணம் என்ன என்பது குறித்து ஆலோசனை நடத்த கடந்த மூன்று நாட்களாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் இல்லத்தில் அதிருப்தி அணியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்கள் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

எடப்பாடி பழனிசாமியின் தன்னிச்சையான முடிவுகளே தொடர் தோல்விகளுக்குக் காரணம் என அதிருப்தி குழுவினர் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்தநிலையில், அ.தி.மு.க.வின் 55-வது ஆண்டுவிழாவையொட்டி, சென்னையில் ராயப்பேட்டையில் உள்ள எம்.ஜி.ஆர். மாளிகையில் அ.தி.மு.க.வினர் இன்று கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அங்குள்ள எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

மேலும், 'Dravidian Phoenix' என்ற புத்தகத்தை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். இந்நிலையில், அ.தி.மு.க.வின் 55-வது ஆண்டுவிழாவையொட்டி, கட்சி தொண்டர்களுக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்தார்.

இந்த நிலையில், அதிமுக தொடக்க விழாவையொட்டி தலைமை அலுவலகத்திற்கு ஈபிஎஸ் அழைத்திருந்த நிலையில், திருத்தணியில் தனியாக எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து எஸ்.பி. வேலுமணி மரியாதை செலுத்தி இனிப்புகளை வழங்கினார். எஸ்.பி. வேலுமணியை தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் தங்கமணி பள்ளிபாளையத்தில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு தனியாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். ஈபிஎஸ் விடுத்த அழைப்பை ஏற்காமல், தனது சொந்த ஊரில் தனியாக விழா நடத்தினர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com