

சென்னை,
இலவச பொங்கல் பரிசு திட்டம் தொடர்பாக ஐகோர்ட்டு உத்தரவுகளை மீறி அ.தி.மு.க. கட்சியினர் வைத்துள்ள பேனர்களை அகற்ற வேண்டும் என்று தலைமைச் செயலாளரிடம் தி.மு.க. புகார் மனு அளித்துள்ளது.
இதுகுறித்து தமிழக தலைமைச் செயலாளர் கே.சண்முகம் மற்றும் அரசு உயர் அதிகாரிகளிடம் தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அளித்த புகார் மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-
கோர்ட்டு நேரடியாக பிறப்பிக்கும் தடைகளை, மறைமுகமாகச் சென்று மீறக்கூடாது. கோர்ட்டில் அளிக்கும் உத்தரவாதத்தை மீறி செயல்படுவதும் கோர்ட்டு அவமதிப்பு குற்றமாகும். கோர்ட்டின் உத்தரவுகளை எந்தவொரு மீறுதலும் இல்லாமல் அதிகாரிகள் செயல்படுத்துவது கடமையாகும்.
ஆனால் சட்ட ரீதியான இந்த 3 அம்சங்களுமே இலவச பொங்கல் பரிசு மற்றும் ரூ.2,500 தொகை வழங்கும் திட்டத்தில் தமிழகம் முழுவதுமே வேண்டுமென்றே மீறப்பட்டுள்ளன. இவை அனைத்தையும் ஆளும் கட்சி, முதல்-அமைச்சர், துணை முதல்- அமைச்சர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் ஆகியோர் வழங்குவதுபோல காட்டுகின்றனர்.
பொங்கல் பரிசு தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் தி.மு.க. வழக்கு தாக்கல் செய்தது. அதில் சில உத்தரவுகளை ஐகோர்ட்டு பிறப்பித்திருந்தது. அந்த வழக்கில் அரசு தரப்பில் உத்தரவாதமும் அளிக்கப்பட்டு இருந்தது. பொங்கல் பரிசு மற்றும் ரூ.2,500 வழங்குவதற்காக அரசு வழங்கும் டோக்கன் மட்டுமே ரேஷன் கடைகளில் ஏற்கப்படும் என்றும் அரசியல் கட்சிகளோ, அரசியல்வாதிகளோ வழங்குவது ஏற்கப்படாது என்றும் கூறப்பட்டது.
இதுதொடர்பாக அரசு சுற்றறிக்கையையும் வெளியிட்டது. அரசு அளித்த உத்தரவாதத்தின் அடிப்படையில் ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது. அதில், அரசினால் வழங்கப்படும் டோக்கனில் எந்தவொரு அரசியல் தலைவர்களின் படங்களையும் அச்சிடக்கூடாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இப்படி தடை செய்யப்பட்டுள்ள நிலையில் அ.தி.மு.க. வின் மேலிடத்தின் உத்தரவின்படி அக்கட்சியைச் சேர்ந்தவர்கள் தமிழகம் முழுவதும் பல இடங்களிலும், ரேஷன் கடைகளின் அருகிலும் முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர், அமைச்சர்கள், உள்ளூர் எம்.எல்.ஏ.க்களின் படம் பொறிக்கப்பட்ட பேனர்களை வைத்துள்ளனர்.
இது ஐகோர்ட்டின் உத்தரவை அப்பட்டமாக மீறும் செயலாகும். எனவே, அதுபோன்ற பேனர்களை உடனடியாக அகற்றவும், பொங்கல் பரிசு திட்டத்தில் ஐகோர்ட்டு பிறப்பித்துள்ள உத்தரவுகள் கடைப்பிடிக்கப்படுகிறதா என்பதை உறுதி செய்யவும் அனைத்து மாவட்ட கலெக்டர்கள் மற்றும் பிற அதிகாரிகளுக்கு நீங்கள் உத்தரவிட வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.