

சென்னை,
நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிகளுக்கு அக்டோபர் மாதம் 21ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன.
இந்த இரு சட்டசபை தொகுதிகளில் போட்டியிட அ.தி.மு.க.வினர் சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமையகத்தில் போட்டி போட்டு விருப்ப மனு வாங்கி வருகின்றனர். விக்கிரவாண்டி தொகுதிக்கு அ.தி.மு.க. சார்பில் முன்னாள் எம்.பி. லட்சுமணன், விக்கிரவாண்டி ஒன்றிய செயலாளர் வேலு, காணை ஒன்றிய செயலாளர் முத்தமிழ்ச்செல்வன், பொதுக்குழு உறுப்பினர் பன்னீர், வக்கீல் தம்பித்துரை ஆகியோர் விருப்ப மனு கொடுத்துள்ளனர்.
நாங்குநேரி தொகுதியில் போட்டியிட முன்னாள் எம்.பி.யும், அ.தி.மு.க.வின் வழக்கறிஞர் அணி செயலாளருமான மனோஜ் பாண்டியன் விருப்ப மனு தாக்கல் செய்து உள்ளார்.
இதுபோல் அ.தி.மு.க. நட்சத்திர பேச்சாளரும், நடிகர் ஜஸ்டினின் மகளுமான பபிதா நாங்குநேரி தொகுதியில் போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளார். இதனிடையே, நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான அ.தி.மு.க. வேட்பாளர் நேர்காணல் நிறைவு பெற்றுள்ளது.
இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய முதல் அமைச்சர் பழனிசாமி, அ.தி.மு.க. வேட்பாளர்கள் இறுதி செய்யப்படவில்லை. அவர்களின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளதாக தெரிவித்து உள்ளார்.