அதிமுக முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி ? சற்று நேரத்தில் அறிவிப்பு வெளியாகும் எனத்தகவல்

ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ் ஈபிஎஸ் கூட்டாக செய்தியாளர்களை சந்திக்க உள்ளனர்.
அதிமுக முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி ? சற்று நேரத்தில் அறிவிப்பு வெளியாகும் எனத்தகவல்
Published on

சென்னை,

தமிழகத்தில் வரும் 2021 ஆம் ஆண்டில் சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளது. சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே எஞ்சியுள்ளதால் தற்போதே அரசியல் களம் விறுவிறுப்படைந்து வருகிறது. ஆளும் அதிமுகவில் முதல்வர் வேட்பாளராக யார் ? முன்னிறுத்தப்படுவார்கள் என்பது குறித்த விவாதங்கள் கடந்த சில வாரங்களாகவே சூடுபிடித்தது.

குறிப்பாக இந்த விவகாரம் இடையே அதிமுகவின் செயற்குழு கூட்டத்தில் ஓபிஎஸ்- ஈபிஎஸ் இடையே கருத்து மோதல் ஏற்பட்டதாக தகவல் வெளியானது அக்கட்சியினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது. செயற்குழு கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கேபி முனுசாமி, அதிமுக முதல்வர் வேட்பாளர் யார் என்பது அக்டோபர் 7 ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று கூறினார்.

இதன்படி, முதல்வர் வேட்பாளரை அறிவிக்க அதிமுக தயாராகி வருகிறது. இதற்காக நேற்று காலை முதல் சுமார் 18 மணி நேரம் மூத்த அமைச்சர்கள் அதிமுகவின் மூத்த நிர்வாகிகள், ஒபிஎஸ் - ஈபிஎஸுடன் மாறி மாறி ஆலோசனை நடத்தினர். அதிகாலை 3 மணி வரை இந்த ஆலோசனை நீடித்தது.

இந்த நிலையில், இன்று காலை 10 மணியளவில் அதிமுக முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து முதல்வர் வேட்பாளர் குறித்தும் வழிகாட்டுதல் குழுவில் இடம் பெறுபவர்கள் பற்றிய தகவலையும் வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது. அதிமுக முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியே அறிவிக்கப்படுவார் எனத்தெரிகிறது.

அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் இன்று அறிவிக்கப்பட உள்ளதால், அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். அதிமுக நிர்வாகிகளும் வருகை தர தொடங்கியுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com