தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்க அ.தி.மு.க. காலதாமதம் செய்கிறது - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்க அ.தி.மு.க. காலதாமதம் செய்கிறது என பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.
தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்க அ.தி.மு.க. காலதாமதம் செய்கிறது - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
Published on

மதுரை,

தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் சென்னை செல்வதற்காக நேற்று மாலை மதுரை விமான நிலையம் வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஜெயலலிதா, கருணாநிதி என்ற இருபெரும் தலைவர்கள் இல்லாத நிலையில் வருகிற சட்டசபை தேர்தல் நடக்க இருக்கிறது. எனவே இது அனைத்து கட்சிகளுக்கும் புது தேர்தல்தான். முதல் தேர்தல் தான். அனைத்து கட்சியினருக்கும் மிகப்பெரிய சவால்கள் காத்திருக்கின்றன. வருகிற தேர்தலில் தே.மு.தி.க. இருக்கும் அணியே வெற்றி பெறும். ஏற்கனவே நாங்கள் தனியாக தேர்தல் களம் கண்டிருக்கிறோம். கட்சி தொடங்கி 16 வருடங்கள் ஆகின்றன. எங்களுக்கு தேர்தல் பிரசாரம் பெரிய விஷயமில்லை. எங்களது செயற்குழு, பொதுக்குழு கூடி முடிவெடுத்த பிறகு தே.மு.தி.க. தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கும்.

தற்போது 234 தொகுதிகளுக்கும் தேர்தல் பொறுப்பாளர்கள் நியமித்து, ஆலோசனை கூட்டங்கள் நடத்தி, பூத் கமிட்டி அமைப்பது உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. சசிகலா ஆளுமைமிக்க தலைவர். அவர் சிறையில் இருந்து வெளியே வந்ததும் மீண்டும் அவரது பணி தொடர ஒரு பெண்ணாக அதனை வரவேற்கிறேன். அவர் பூரண குணமாகி அரசியல் பணி தொடர வாழ்த்துகிறேன். பொள்ளாச்சி பாலியல் வழக்கில், தவறு செய்தவர்கள் தண்டனை அனுபவிக்க வேண்டும். தலைவர் விஜயகாந்த் கூறியதுபோல் உப்பு தின்றவர் தண்ணீர் குடித்தே ஆக வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். பின்னர் அவர் விமானம் மூலம் சென்னை சென்றார். முன்னதாக உசிலம்பட்டியில் கட்சி பிரமுகர் இல்ல திருமண விழாவில் பிரேமலதா விஜயகாந்த் கலந்துகொண்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தேர்தல் தேதி அறிவித்த பின்னரே கூட்டணி குறித்து பேச முடியும் என அ.தி.மு.க. காலதாமதம் செய்து வருகிறது. விரைவில் உயர்மட்ட குழு அமைத்து கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகளை தொடங்கினால் வெற்றிக்கான வழிவகை ஏற்படும். சசிகலாவை அ.தி.மு.க.வினர் ஏற்றுக்கொள்வது அவர்களின் நிலைப்பாடு. அதில் நான் தலையிட முடியாது.

விரைவில் அ.தி.மு.க.வினர் நல்ல முடிவு எடுப்பார்கள் என நான் நம்புகிறேன். சட்டமன்ற தேர்தலில் இறுதிகட்ட வாக்குச்சேகரிப்பான கிளைமேக்ஸ்-ல் தான் விஜயகாந்த் பிரசாரத்திற்கு வருவார். தேர்தல் பணிகளை நாங்கள் சிறப்பாக செய்து வருகிறோம். தேர்தல் எப்போது வந்தாலும் தே.மு.தி.க. சந்திக்க தயாராக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com