அமித்ஷாவுடன் அ.தி.மு.க. நிர்வாகிகள் சந்திப்பு: தொகுதிப்பங்கீடு குறித்து ஆலோசனை?

கோப்புப்படம்
தேசிய ஜனநாயக கூட்டணியை மேலும் வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகிஉள்ளது.
சென்னை,
தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் பயணத்தின் நிறைவு விழா மாநாடு புதுக்கோட்டையில் நடந்தது. இந்த மாநாட்டில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொண்டார்.
அதில் உரையாற்றிய அவர், “தமிழ்நாட்டின் புனிதமான மண்ணுக்கு என் வணக்கங்களை தெரிவித்துக்கொள்கிறேன். மாபெரும் மகத்தான தமிழ்மொழியில் உரையாற்ற முடியவில்லை என மன்னிப்பு கோருகிறேன். நயினார் நாகேந்திரனின் யாத்திரை நிறைவு விழாவில் கூறுகிறேன் ஏப்ரலில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி மலரும். பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் வளர்ச்சி பாதையில் பங்கேற்போம், அணிவகுப்போம். எப்படியாவது திமுக கூட்டணி ஆட்சியை நாம் ஒழித்தே தீருவோம். முடிவு கட்டியே தீருவோம்.
ஒட்டுமொத்த பாரதத்தில் மிகப்பெரிய ஊழல் நிறைந்த கட்சி, ஆட்சி என்று சொன்னால் அது திமுகதான். தேர்தல் அறிக்கையில் மிகக்குறைவான வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கும் ஆட்சி திமுகதான். ஒரு குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டியே தீர வேண்டும். அதற்கு நேரம் வந்துவிட்டது. தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. அரசின் ஒரே நோக்கம் உதயநிதியை முதல்-அமைச்சராக்குவதான்.
ஊழலுக்கான அடையாளமாகிவிட்டது திமுக. சிறைக்கு சென்றபின்னும் 248 நாள் அமைச்சராக தொடர்ந்தார் ஒருவர். கருப்பு பணத்தை வெள்ளையாக்குவது, மணல் கொள்ளையில் ஒரு தலைவரின் பெயர் உள்ளது. ஐபிஎஸ், ஐஏஎஸ் தேர்வு, ரெயில் நிலைய அறிவிப்பில் தமிழ் இருப்பதை பிரதமர் மோடி உறுதி செய்தார்
2024-ல் துவங்கி மோடி அரசு மாபெரும் வெற்றி பயணத்தை தொடர்ந்து நடத்தி கொண்டு வருகிறது. அந்தாண்டு மோடி 3வது முறையாக பிரதமர் ஆக பதவியேற்றார். ஒடிசா, அரியானா, மராட்டியம் உள்ளிட்ட மாநிலங்களில் பா.ஜ.க. ஆட்சி அமைத்தது. 27 ஆண்டுக்கு பிறகு டெல்லியில் கடந்த ஆண்டு பா.ஜ.க. மீண்டும் ஆட்சி அமைத்தது. 2025ம் ஆண்டு பீகாரில் இந்தியா கூட்டணி மண்ணைக் கவ்வியது. 2026 ல் தமிழகம் மற்றும் மேற்கு வங்காளத்தில் பா.ஜ.க, கூட்டணி வெற்றி பெற உறுதி எடுக்க வேண்டும். தமிழகத்தில் பெரும்பான்மை பலத்துடன், ஜார்ஜ் கோட்டையை அடைவோம்” என்று அமித் ஷா கூறினார்.
இந்நிலையில் திருச்சியில் தங்கியுள்ள உள்துறை மந்திரி அமித் ஷாவுடன் அதிமுக மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர். இதன்படி அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, முன்னாள் எம்பிக்கள் ரத்தினவேல், ப. குமாருடன் அமித் ஷா ஆலோசனையில் ஈடுபட்டார்.
தொகுதி உடன்பாடு, கூட்டணியில் கட்சிகளை சேர்ப்பது மற்றும் சட்டமன்றத் தேர்தல் வியூகம் தொடர்பாக அமித் ஷாவுடன் அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை செய்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் உள்துறை மந்திரி அமித்ஷாவை நாளை எடப்பாடி பழனிசாமி சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.






