அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. கே.சி. பழனிசாமி ஜாமீன் மனு தள்ளுபடி

இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்ட அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. கே.சி. பழனிசாமியின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. கே.சி. பழனிசாமி ஜாமீன் மனு தள்ளுபடி
Published on

கோவை,

ஈரோடு மாவட்டம் சென்னிமலையை சேர்ந்தவர் முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி. எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்து அ.தி.மு.க.வில் இருந்து வந்தார். இவர் கோவை ஆர்.எஸ்.புரம் லாலிரோடு பகுதியில் வசித்து வருகிறார்.

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர், சசிகலாவை அ.தி.மு.க. பொதுச்செயலாளராக தேர்ந்தெடுத்ததற்கு இவர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அத்துடன் பொதுச்செயலாளரை தொண்டர்கள் தான் தேர்வு செய்ய வேண்டும். நிர்வாகிகள் தேர்வு செய்தது செல்லாது என்றும் தெரிவித்து இருந்தார்.

இதுதவிர அ.தி.மு.க.வில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி கிடையாது. அதை ரத்து செய்ய வேண்டும் எனவும் தேர்தல் ஆணையத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை தேர்தல் ஆணையம் ரத்து செய்தது. மேலும் அ.தி.மு.க.வில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி தொடர்பாக டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

இதற்கிடையே அ.தி.மு.க. 2 அணியாக பிரிந்து பின்னர் ஒன்றாக சேர்ந்த பின்பு கே.சி.பழனிசாமிக்கு கட்சியில் செய்தி தொடர்பாளர் பதவி வழங்கப்பட்டது. தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர், மத்திய அரசுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிப்போம் என கருத்து தெரிவித்தார்.

இதனால் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி அவர் அந்த கருத்தை கூறியதாக கடந்த 2018ம் ஆண்டு மார்ச் மாதம் 16ந்தேதி கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

இதன்பின்னர் சில நாட்களில் அவர் மீண்டும் கட்சியில் இணைந்ததாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியானது. ஆனால் இந்த தகவலை அ.தி.மு.க. தலைமை மறுத்தது. இந்த நிலையில் கே.சி.பழனிசாமி தனியாக இணையதளம் தொடங்கி அதில் தான் அ.தி.மு.க.வில் தொடர்ந்து இருப்பது போல் காண்பித்து வந்ததாக கூறப்படுகிறது.

அத்துடன் அ.தி.மு.க. லெட்டர் பேடு, இரட்டை இலை சின்னம் ஆகியவற்றுடன் முகநூல் (பேஸ்புக்), வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் தனது கருத்துகளை பதிவிட்டு வந்ததாக தெரிகிறது. இதனைத்தொடர்ந்து கோவை முத்துகவுண்டன்புதூர் ஊராட்சி தலைவர் வி.பி.கந்தவேல் கடந்த 24ந்தேதி சூலூர் போலீசில் கே.சி.பழனிசாமி மீது புகார் அளித்தார்.

புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதைத்தொடர்ந்து கடந்த 25ந்தேதி அதிகாலை 4 மணியளவில் லாலி ரோட்டில் உள்ள கே.சி.பழனிசாமி வீட்டிற்கு கருமத்தம்பட்டி உட்கோட்ட போலீஸ் துணை சூப்பிரண்டு பாலமுருகன் தலைமையிலான போலீசார் சென்றனர்.

அப்போது வீட்டில் கே.சி.பழனிசாமி நன்கு தூங்கிக்கொண்டு இருந்தார். பின்னர் அவரை போலீசார் தட்டி எழுப்பி திடீரென கைது செய்து, போலீஸ் வேனில் ஏற்றிக்கொண்டு சூலூர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். வேனில் ஏற்ற முயன்றபோது, போலீசாருக்கும், கே.சி.பழனிசாமிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அவர் மீது 16 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து அன்று மாலை அவரை கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று உடல் பரிசோதனை செய்தனர்.

இதன்பின், கோர்ட்டு விடுமுறை என்பதால், கோவை புலியகுளத்தில் உள்ள நீதிபதி வேடியப்பன் வீட்டில் கே.சி.பழனிசாமி ஆஜர்படுத்தப்பட் டார். அவரை அடுத்த மாதம் (பிப்ரவரி) 7ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி வேடியப்பன் உத்தரவிட்டார்.

இதையடுத்து அவரை போலீசார் கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இதனிடையே, தனக்கு ஜாமீன் வழங்க கோரி சூலூர் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் கே.சி. பழனிசாமி மனு செய்துள்ளார். இந்த மனு நீதிமன்றத்தில் இன்று தள்ளுபடி செய்யப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com