திமுகவில் இணைகிறார் அதிமுக முன்னாள் எம்.பி. மைத்ரேயன்?

அதிமுக முன்னாள் எம்.பி. மைத்ரேயன் திமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திமுகவில் இணைகிறார் அதிமுக முன்னாள் எம்.பி. மைத்ரேயன்?
Published on

சென்னை,

சென்னையை சேர்ந்த பிரபல புற்றுநோய் சிகிச்சை நிபுணரான டாக்டர் வி.மைத்ரேயன் கடந்த 1991-ம் ஆண்டு பாஜகவில் இணைந்தார். தொடர்ந்து 1999-ம் ஆண்டு வரை அக்கட்சியில் பயணித்தார். இதையடுத்து, மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் தலைமையை ஏற்று மைத்ரேயன் அதிமுகவில் இணைந்தார்.

2002-ம் ஆண்டு அதிமுக சார்பில் மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார். தொடர்ச்சியாக 3 முறை எம்.பி.யாக இருந்தார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவில் உட்கட்சி மோதல் ஏற்பட்டது. ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்ததற்காக மைத்ரேயன் கட்சியில் இருந்து நீக்கிவைக்கப்பட்டார். இதையடுத்து அவர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளராக இருந்து வந்தார்.

இதையடுத்து கடந்த 2023 ஆண்டு ஜூன் மாதம் 9-ம் தேதி டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் அருண்சிங், தேசிய செயலாளர் சி.டி.ரவி, செய்தித்தொடர்பாளர் ஜாபர் இஸ்லாம் ஆகியோர் முன்னிலையில் மைத்ரேயன் பாஜகவில் இணைந்தார். அவருக்கு பா.ஜ.க. உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது.

இதையடுத்து, கடந்த 2024 ஆண்டு செப்டம்பர் மாதம் 12-ம் தேதி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை மைத்ரேயன் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது, எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் மைத்ரேயன் அதிமுகவில் மீண்டும் தன்னை இணைத்துக்கொண்டார்.

இந்த நிலையில், அதிமுக முன்னாள் எம்.பி. மைத்ரேயன் இன்று திமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் காலை 10.30 மணிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மைத்ரேயன் திமுகவில் இணைகிறார் என்று கூறப்படுகிறது.

கடந்த மாதம் 21-ம் தேதி தான் அதிமுக முன்னாள் எம்.பி. அன்வர் ராஜா திமுகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com