

ஜோலார்பேட்டை,
தமிழகத்தில் 2016-ம் ஆண்டு நடைபெற்ற அ.தி.மு.க. ஆட்சி காலத்தின்போது தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்தவர் நிலோபர் கபில். கட்சி தலைமையுடனும், முன்னாள் வணிக வரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணியுடனும் மோதல் போக்கை கடைபிடித்து வந்தார். 2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் ஜோலார்பேட்டை தொகுதியில் போட்டியிட அவர் வாய்ப்பு கேட்டும் அவருக்கு வழங்கப்படவில்லை.
இந்த நிலையில், தொழிலாளர் நலத்துறை அமைச்சராக நிலோபர் கபில் இருந்த காலத்தில், கோடிக்கணக்கில் பணம் மோசடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதனை தொடர்ந்து, அ.தி.மு.க.வில் அடிப்படை உறுப்பினரில் இருந்து அவர் நீக்கப்பட்டார்.
சிறிது காலம் அமைதியாக இருந்த நிலோபர் கபில் மீண்டும் அ.தி.மு.க.வில் இணைந்தார். ஆனால், அவருக்கு கட்சியில் முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்று தெரிகிறது.
இந்த நிலையில், அவர் தி.மு.க.வில் இணைய திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. வரும் 14-ந்தேதி ஜோலார்பேட்டை பொன்னேரியில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொள்ளும் தி.மு.க. வடக்கு மண்டல 47 தொகுதி வாக்குச்சாவடி குழு பயிற்சி மாநாடு நடைபெற இருக்கிறது.
இந்த நிகழ்வில், நிலோபர் கபில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைவார் என்று தெரிகிறது.