அரக்கோணத்தில் 2 இளைஞர்கள் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு அம‌முக பொதுச்செயலாளர் தினகரன் கண்டனம்

அரக்கோணத்தில் முன் விரோதத்தால் 2 இளைஞர்கள் கொல்லப்பட்ட சம்பவம் கடும் கண்டனத்திற்குரியது என அம‌முக பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.
அரக்கோணத்தில் 2 இளைஞர்கள் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு அம‌முக பொதுச்செயலாளர் தினகரன் கண்டனம்
Published on

ராணிப்பேட்டை,

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே உள்ள சோகனூர் பகுதியைச் சேர்ந்த அர்ஜூன், செப்பேடு பகுதியை சேர்ந்தவர் சூர்யா ஆகிய இரண்டு இளைஞர்கள் கடந்த 7 ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டனர். இது குறித்து காவல்துறையினர் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொலையாளிகளை கைது செய்ய கோரி, கொலை செய்யப்பட்ட இளைஞர்களின் உறவினர்கள் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டு வந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக நேற்று வரை 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இந்த கொலையில் தொடர்புடைய மற்ற குற்றவாளிகளை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த 3 பேர் சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த கொலைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் அரக்கோணத்தில் 2 இளைஞர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு அமமுக பொதுச்செயலாளர் தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், அரக்கோணத்தில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த அர்ஜூன்,சூர்யா என்ற இரு இளைஞர்கள் முன்விரோதத்தால் கொடூரமாக கொல்லப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. பெரும் அதிர்ச்சியளிக்கக்கூடிய இந்தப் பாதகத்தைச் செய்தவர்கள் மீது காவல்துறை உறுதியான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் கொல்லப்பட்ட இளைஞர்களின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் இத்தகைய வன்மம் நிறைந்த செயல்கள் எதிர்காலத்தில் நடைபெறாமல் தடுத்திட வேண்டியது அவசியம் என்றும் அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com