

சென்னை,
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து புதுச்சேரி புறப்பட்டு சென்றுள்ளார். அவருடன் முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், எஸ்.பி.வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் உடன் சென்றுள்ளனர்.
சமீபத்தில் நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட 47 வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். இதனிடையே, 108 தொகுதிகளில் வெற்றி பெற்ற த.வெ.க. கட்சி, ஆட்சியமைக்க கவர்னரிடம் அனுமதி கேட்டும், பெரும்பான்மை இல்லாத காரணத்தால் விஜய்யை ஆட்சியமைக்க கவர்னர் இதுவரை அழைப்பு விடுக்கவில்லை.
இந்த சூழலில், அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வேட்பாளர்கள் சுமார் 30 பேர் புதுச்சேரியில் உள்ள தனியார் விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களை சந்திப்பதற்காக எடப்பாடி பழனிசாமி தற்போது புதுச்சேரி புறப்பட்டு சென்றுள்ளார். தமிழக அரசியலில் அடுத்தடுத்து நிகழ்ந்து வரும் பரபரப்பான திருப்பங்களுக்கு மத்தியில், தற்போது அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி புதுச்சேரி சென்றிருப்பது கவனத்திற்குரியதாக பார்க்கப்படுகிறது.