அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தல்: ஓ.பன்னீர்செல்வம் தரப்பு தொடர்ந்த வழக்கு ஐகோர்ட்டில் இன்று விசாரணை

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் பதவிக்கு எடப்பாடி பழனிசாமி வேட்பு மனு தாக்கல் செய்தார். இதற்கிடையே தேர்தலை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பு தொடர்ந்த வழக்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) விசாரணைக்கு வருகிறது.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தல்: ஓ.பன்னீர்செல்வம் தரப்பு தொடர்ந்த வழக்கு ஐகோர்ட்டில் இன்று விசாரணை
Published on

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அ.தி.மு.க. வில் பல அதிரடி மாற்றங்கள் அரங்கேறி தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தின.

மீண்டும் பரபரப்பு

கட்சியில் ஒற்றை தலைமை விவகாரம் உச்சம் தொட்ட நிலையில், ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டதோடு, இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இதை எதிர்த்து ஐகோர்ட்டு, சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு என அ.தி.மு.க.வில் பல பரபரப்பு காட்சிகள் அரங்கேறின.

இதற்கிடையே அ.தி.மு.க. வில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அந்த கட்சியின் பொதுச்செயலாளர் தேர்தல் வருகிற 26-ந்தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் 18-ந்தேதியும் (நேற்று), 19-ந் தேதியும் (இன்று) நடைபெறும்' என்றும் அறிவிக்கப்பட்டது.

மேளதாளத்துடன்

அதன்படி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர். மாளிகையில், பொதுச்செயலாளர் பதவிக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. இதையொட்டி தலைமை அலுவலகத்தில் காலை முதலே தொண்டர்கள் குவிய தொடங்கினர்.

எடப்பாடி பழனிசாமி வேட்புமனு தாக்கல் செய்ய வருவதாக தகவல் பரவியதால் அவரை வரவேற்க மேளதாளத்துடன் அ.தி.மு.க. நிர்வாகிகளும், தொண்டர்களும் காத்திருந்தனர்.

எடப்பாடி பழனிசாமி வேட்புமனு

தொண்டர்களின் உற்சாக வரவேற்புக்கு இடையே எடப்பாடி பழனிசாமி கட்சி அலுவலகத்துக்கு வந்தார். அப்போது திரண்டிருந்த தொண்டர்கள் மலர்தூவி உற்சாகமாக வரவேற்றனர். கட்சி அலுவலகத்திற்குள் நுழைந்த அவர், அங்கிருக்கும் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உருவ சிலைகளுக்கும், உருவப்படத்துக்கும் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் அ.தி.மு.க. தேர்தல் ஆணையர்கள் நத்தம் விஸ்வநாதன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோரிடம் எடப்பாடி பழனிசாமி வேட்புமனு தாக்கல் செய்தார். முன்னதாக வேட்புமனுவுக்கான கட்டணம் ரூ.25 ஆயிரத்தை செலுத்தினார்.

அப்போது திரண்டிருந்த கட்சியினர் அவரை வாழ்த்தி கோஷங்கள் எழுப்பினர்.

20 மாவட்ட செயலாளர்கள்

எடப்பாடி பழனிசாமி வேட்புமனுவில் முன்மொழிபவர்கள், வழிமொழிபவர்கள் என 20 மாவட்ட செயலாளர்கள் கையெழுத்திட்டனர்.

பொதுச்செயலாளர்பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்த எடப்பாடி பழனிசாமிக்கு அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் மற்றும் சி.பொன்னையன், கே.பி.முனுசாமி, கே.ஏ.செங்கோட்டையன், டி.ஜெயக்குமார், எஸ்.பி.வேலுமணி, செல்லூர் ராஜூ, விஜயபாஸ்கர், ஓ.எஸ்.மணியன் உள்பட முன்னாள் அமைச்சர்கள் உள்பட மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

எடப்பாடி பழனிசாமி வேட்புமனு தாக்கல் செய்து காரில் திரும்பியபோது, பூசணிக்காயில் கற்பூரம் ஏற்றி சுற்றி எடப்பாடி பழனிசாமிக்கு திருஷ்டி கழித்தனர். தொண்டர்கள் சிலர் தேங்காய் உடைத்தும் திருஷ்டி கழித்தனர்.

போட்டியின்றி தேர்வு?

வேட்புமனு தாக்கல் இன்று முடிவடைகிறது. நாளை (திங்கட்கிழமை) வேட்புமனு பரிசீலனை நடக்கிறது. 21-ந்தேதி வேட்புமனு திரும்ப பெறலாம் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. 26-ந்தேதி காலை 9 மணிக்கு தேர்தல் நடக்கிறது.

இந்த தேர்தலில் பொதுச்செயலாளர் பதவிக்கு எடப்பாடி பழனிசாமி மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இன்று மதியம் 3 மணிக்கு வேட்புமனு தாக்கல் முடிந்த உடனேயே பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி தேர்வு என்று அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முதல் நாளான நேற்று எடப்பாடி பழனிசாமி தவிர 37 பேர் வேட்பு மனு வாங்கி உள்ளனர். அனைவருமே எடப்பாடி பழனிசாமி பெயரிலேயே மனுக்கள் பெற்றுள்ளனர்.

ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வழக்கு

இந்தநிலையில் பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் மற்றும் ஜே.சி.டி.பிரபாகரன் ஆகியோர் தனித்தனியாக அவசர வழக்குகளை தாக்கல் செய்துள்ளனர்.

இந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

சட்டவிரோதம்

அ.தி.மு.க., பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் நாங்கள் தொடர்ந்துள்ள வழக்குகள் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தபோது, அ.தி.மு.க., தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கோரப்பட்டது.

ஆனால், அன்று மாலையே அவசர அவசரமாக, பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிப்பு சட்டவிரோதமாக வெளியிடப்பட்டு உள்ளது.

அதிகாரம் இல்லை

இது ஐகோர்ட்டை மீறும் செயலாகும். அதுமட்டுமல்ல ஐகோர்ட்டின் கண்ணியத்தை அவமரியாதை செய்யும் நடவடிக்கையாகும். கட்சி விதிகளை திருத்தம் செய்ய பொதுக்குழுவிற்கு அதிகாரம் இருந்தாலும், பொதுச்செயலாளர் தேர்தல் தொடர்பான விதிகளில் திருத்தம் செய்ய பொதுக்குழுவிற்கு எந்த ஒரு அதிகாரமும் இல்லை.

ஜெயலலிதா மரணத்திற்கு பின்பு 2017-ம் ஆண்டு செப்டம்பரில் நடந்த பொதுக்குழுவில், ஜெயலலிதாவை கட்சியின் நிரந்தர பொதுச்செயலாளர் என அறிவித்ததுடன், பொதுச்செயலாளர் பதவியை கலைத்து, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டன. திருத்தப்பட்ட இந்த விதியின்படி 1.5 கோடி உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் பதவிக் காலம் 2026-ம் ஆண்டு வரை உள்ளது.

தடை வேண்டும்

பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்த வழக்கு நிலுவையில் உள்ளபோது, எந்த காரணமும் இல்லாமல் பொதுச்செயலாளர் பதவிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதுவும், வார இறுதி நாட்களில் வேட்பு மனுத்தாக்கல் செய்ய அறிவிப்பு வெளியிட்டதன் மூலம், எடப்பாடி பழனிசாமியை தவிர வேறு யாரையும் போட்டியிட விடாமல் தடுத்துள்ளனர்.

எனவே, இந்த தேர்தல் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். அறிவிப்புக்கு தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

இன்று விசாரணை

இந்த வழக்கை உடனே விசாரணைக்கு எடுக்க உத்தரவிட வேண்டும் என்று ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜாவிடம் அவர்கள் சார்பில் வக்கீல்கள் முறையிட்டனர்.

இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட பொறுப்பு தலைமை நீதிபதி, இந்த வழக்கை நீதிபதி குமரேஷ்பாபு விசாரிக்க அனுமதி வழங்கினார். இதன்படி, இந்த வழக்கை நீதிபதி கே.குமரேஷ்பாபு இன்று காலை 10 மணிக்கு விசாரிக்க உள்ளார்.

அவசர ஆலோசனை

இதற்கிடையே சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள இல்லத்தில் எடப்பாடி பழனிசாமி நேற்று கட்சியின் மூத்த நிர்வாகிகள், சட்ட வல்லுனர்களுடன் அவசர ஆலோசனை நடத்தினார்.

தேர்தலுக்கு சிக்கல் வந்தால் எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து அப்போது ஆலோசித்ததாக தெரிகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com