

சேலத்தில் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது,
சேலம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. எடப்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சுமார் 40 வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. தற்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதிமுக சார்பில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது.
2 ஆண்டு கால கொரோனா பாதிப்பால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். தற்போது மக்கள் படிப்படியாக மீண்டு வரும் இந்த சூழ்நிலையில் திமுக அரசு மின் கட்டணத்தை உயர்த்தி உள்ளது. மின் கட்டணமானது 12 முதல் 52 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இது மிகுந்த கண்டனத்திற்கு உரியது. இதனை கண்டித்து வருகின்றன 16-ம் தேதி அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகின்றது.
அதிமுக அலுவலக சாவி வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. தீர்ப்பு மூலம் உண்மை, தர்மம் வென்றது. அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் விரைவில் நடத்தப்படும்.
மேலும், நீதிமன்றங்களுக்கு செல்பவர்களுக்கு இப்படி கட்சியில் இடம் கிடைக்கும். மக்கள் கடுமையாக கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நிலையில், மக்களின் எண்ணங்களை புரிந்து கொள்ளாமல் மின்கட்டணம், சொத்து வரி போன்றவற்றை திமுக அரசு உயர்த்தி வருகின்றது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.