

சென்னை,
தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 23-ந்தேதி ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் 5 கோடியே 73 லட்சத்து 43 ஆயிரத்து 291 வாக்காளர்கள் ஓட்டு போட தகுதி பெற்றிருந்தனர். மொத்தம் 85.10 சதவீத வாக்குகள் பதிவாகின.
அதில் 4 கோடியே 87 லட்சத்து 99 ஆயிரத்து 885 வாக்குகள் ஈ.வி.எம். எந்திரம் மூலமாகவும், தபால் வாக்குகளாக 5 லட்சத்து 80 ஆயிரத்து 384-ம் பதிவாகி இருந்தன. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் போட்டியிட்ட அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 1,48,933 வாக்குகள் பெற்று 98,110 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு அடுத்ததாக சுயேட்சை வேட்பாளர் பிரேம்குமார் 50,823 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்துள்ளார். அந்த தொகுதியில் போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் காசி 44,011 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்துள்ளார்.
முன்னதாக எடப்பாடி தொகுதியில் நிறுத்தப்பட்ட த.வெ.க. வேட்பாளரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்ட நிலையில், சுயேட்சை வேட்பாளர் பிரேம்குமாருக்கு த.வெ.க. தலைவர் விஜய் ஆதரவு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.