அ.தி.மு.க. மிகப்பெரிய அளவில் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது - முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு

ஜெயலலிதா முக்கடல் சூழ்ந்த பாரதத்தின் 3-வது பெரிய இயக்கமாக அ.தி.மு.க.வை மாற்றிக் காட்டினார்.
அ.தி.மு.க. மிகப்பெரிய அளவில் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது - முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு
Published on

மதுரை, ஜூன் 3-

அ.தி.மு.க மீண்டும் வலிமை பெறவேண்டும் என தஞ்சாவூர் மாவட்டம் திருப்பனந்தாளில் தன்னுயிரை மாய்த்து கொண்ட அதிமுக தொண்டர் பூக்கடை மகேந்திரன் படத்திற்கு மதுரை மாநகர அ.தி.மு.க. சார்பில் மதுரை ஜான்சி ராணி பூங்காவில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் எராளமான அ.தி.மு.கவினர் கைகளில் மெழுகு வாததி ஏந்தி அஞ்சலி செலுத்தினார்கள். பின்னர் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியதாவது:-

அதிமுகவின் ஒற்றுமை, எதிர்காலத்திற்க்காக தன்னுயிரை மகேந்திரன் நீத்துள்ளார். அ.தி.மு.க. சார்பில் மகேந்திரனுக்காக வீர அஞ்சலியை செலுத்துகிறோம். மகேந்திரன் வீரமரணம் என்பது அ.தி.மு.க. தொண்டர்களின் உணர்வுகளை வெளி காட்டுகிறது. அ.தி.மு.க. மிகப்பெரிய அளவில் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது. பாதிப்புகளுக்கு காரணமானவர்கள் தங்களை உணர்ந்து திருத்திக் கொள்ள வேண்டும்.

3-வது பெரிய இயக்கம்

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் நோக்கங்கள் வெற்றி பெற அ.தி.மு.க.வினர் வீறு கொண்டு எழ வேண்டும் மகேந்திரன் உயிரிழப்பை படிப்பினையாக எடுத்துக் கொண்டு அ.தி.மு.க.வில் தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை செயல்பட வேண்டும். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா தன்னை பற்றி பேசியவர்கள், ஏசியவர்கள் குறித்து கவலைப்படாமல் அவர்களை கட்சியில் சேர்த்து - தாயுள்ளத்தோடு நடந்து கொண்டனர், அவர்களை போலவே அ.தி.மு.க.வில் உள்ள ஒவ்வொரு தலைவர்களும் நடந்து கொள்ள வேண்டும்.

மகேந்திரனின் மரணம் இறுதி மரணமாக இருக்க வேண்டும் அ.தி.மு.க. எழுச்சி பெற வேண்டும். ஜெயலலிதா முக்கடல் சூழ்ந்த பாரதத்தின் 3-வது பெரிய இயக்கமாக அ.தி.மு.க.வை மாற்றிக் காட்டினார். அதே போன்று தொண்டர்களுக்கு மதிப்பளித்து அ.தி.மு.க. வலிமை பெற தலைவர்கள் செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com