வருமான வரித்துறை சோதனையில் அ.தி.மு.க. நிர்வாகி வீட்டில் ரூ.2 கோடி சிக்கியது

ஆண்டிப்பட்டி அருகே அ.தி.மு.க. நிர்வாகி வீட்டில் நள்ளிரவு வரை நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையில் ரூ.2 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.
வருமான வரித்துறை சோதனையில் அ.தி.மு.க. நிர்வாகி வீட்டில் ரூ.2 கோடி சிக்கியது
Published on

தேனி,

தமிழகத்தில் வருகிற 6-ந்தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்தநிலையில், அரசியல் கட்சியினர் மக்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தேர்தல் ஆணையத்தினர் பறக்கும்படைகள் அமைத்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதே போல வருமான வரித்துறையினரும் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட ராஜக்காள்பட்டி, வெள்ளயத்தேவன்பட்டி ஆகிய கிராமங்களில் வசிக்கும் அ.தி.மு.க பிரமுகர்கள் வீடுகள் என 4 இடங்களில் நேற்று முன்தினம் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இதில் 3 இடங்களில் நடைபெற்ற சோதனையில் பணம் மற்றும் ஆவணங்கள் எதுவும் சிக்கவில்லை.

ரூ.2 கோடியே 17 லட்சம் பறிமுதல்

இந்தநிலையில், ஆண்டிப்பட்டி அருகே உள்ள வெள்ளயத்தேவன்பட்டி கிராமத்தை சேர்ந்த ஒன்றிய அ.தி.மு.க. துணை செயலாளரான அமரேசன் என்பவர் வீட்டில் 20-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் மாலை 6 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை இந்த சோதனை நீடித்தது. இதில் கணக்கில் காட்டப்படாத ரூ.2 கோடியே 17 லட்சத்து 18 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதையடுத்து அந்த பணத்தை வருமான வரித்துறையினர் மதுரைக்கு எடுத்து சென்றனர். மேலும் இதுகுறித்து வருமான வரித்துறையினர் சம்பந்தப்பட்ட நபர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com