‘பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு அ.தி.மு.க.வே காரணம்' - சீமான்


‘பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு அ.தி.மு.க.வே காரணம் - சீமான்
x

பரந்தூரில் விமான நிலையம் அமைக்கப்படுவது தேவையற்றது என சீமான் தெரிவித்துள்ளார்.

காஞ்சீபுரம்,

நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை சார்பில், காஞ்சீபுரம் பேருந்து நிலையம் எதிரே ‘சொந்த நிலத்தில் அகதிகளாகும் தமிழர்கள்’ என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். கூட்டத்திற்கு முன்பாக சீமான் செய்தியாளர்களிடம் பேசும் போது கூறியதாவது:-

“சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் 1,300 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. அங்கிருந்து பறப்பதற்கே விமானங்கள் பற்றாக்குறை உள்ளபோது மேலும் ஒரு விமான நிலையம் பரந்தூரில் அமைக்கப்படுவது தேவையற்றது. ஏர்பூட்டி உழுதால்தான் யாரும் சாப்பிட முடியும். ஏர்ப்போட் (விமான நிலையம்) வந்தால் யாரும் சாப்பிட முடியாது.

இயற்கை விளைநிலங்கள் அனைத்தும் அழிந்து போகும். விளை நிலங்களை அழித்து பரந்தூரில் விமான நிலையத்தை அமைக்க விடவே மாட்டோம். மக்களை அச்சுறுத்தி விமான நிலையத்திற்கு இடம் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். பரந்தூரில் விமான நிலையம் அமைந்தால் தனிப்பெரும் முதலாளிகளின் வளர்ச்சியாகத்தான் அது இருக்குமே தவிர ஒட்டு மொத்த நாட்டின் வளர்ச்சி என்று சொல்ல முடியாது.

பரந்தூரில் விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை கொண்டு வந்ததே அ.தி.மு.க.தான். அந்த திட்டத்தை தி.மு.க. தொடர்கிறது. காவல்துறை முதல்-அமைச்சரின் கட்டுப்பாட்டில் இல்லை. குண்டர்கள் பாதுகாப்பு சட்டத்தை பயன்படுத்துகிறார்கள். தலைவர்களுக்கே அச்சுறுத்தல் இருக்கும் சூழ்நிலை தமிழகத்தில் நிலவுகிற போது சாதாரண மக்கள் எப்படி வாழ முடியும் எனத் தெரியவில்லை.”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

1 More update

Next Story