திண்டுக்கல்லில் அ.தி.மு.க. பிரமுகர் வெட்டிக்கொலை: மர்ம கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு

திண்டுக்கல் பகுதியைச் சேரந்த அ.தி.மு.க. பிரமுகர் ஒருவர், சந்தனவர்தினி ஆற்றுப்பாலத்தில் தனது நண்பருடன் நடந்து சென்று கொண்டிருந்தபோது, பைக்கில் பயங்கர ஆயுதங்களுடன் மர்ம கும்பல் வந்தனர்.
திண்டுக்கல்லில் அ.தி.மு.க. பிரமுகர் வெட்டிக்கொலை: மர்ம கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு
Published on

திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அருகே உள்ள பெரியகோட்டை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முத்தன் என்ற மருதமுத்து (வயது 42), செங்கல் சூளை அதிபர். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. அ.தி.மு.க.வில் திண்டுக்கல் மேற்கு ஒன்றிய அமைப்பு சாரா ஓட்டுனர் அணியின் துணைத்தலைவராக பதவி வகித்து வந்தார்.

இந்த நிலையில் மருதமுத்து நேற்று முன்தினம் இரவு பெரியகோட்டை-வன்னியபட்டி சாலையில் உள்ள சந்தனவர்தினி ஆற்றுப்பாலத்தில் தனது நண்பர் கிருபாகரன் என்பவருடன் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிள்களில் பயங்கர ஆயுதங்களுடன் மர்ம கும்பல் வந்தனர்.

அவர்கள் மருதமுத்துவை வழிமறித்து சரமாரியாக தாக்கினர். இதனைக்கண்ட கிருபாகரன் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். மருதமுத்து அவர்களிடமிருந்து தப்பி அருகே இருந்த தென்னந்தோப்பிற்குள் ஓடினார். ஆனால் அந்த கும்பல் விடாமல் துரத்திச்சென்று மருதமுத்துவை அரிவாளால் வெட்டினர். இதில் படுகாயமடைந்த மருதமுத்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார்.

அதனைத்தொடர்ந்து அந்த கும்பலை சேர்ந்தவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் பணம் கொடுக்கல்-வாங்கல் தகராறில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக மருதமுத்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com